டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது.
அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டத்தை அறிவித்தது.
இந்த நிலையில், ஆசிரியர்களைப் போராட்டத்துக்கு வருமாறு சங்கங்கள் வலியுறுத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
எந்தவொரு பள்ளியும் ஆசிரியர் இல்லாமல் இருக்கக் கூடாது
இதுகுறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''இன்று தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற வேண்டும். எந்தவொரு பள்ளியும் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்காமல் இருக்கக்கூடாது.
வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் எவ்வித தொய்வுமின்றி வகுப்புகள் நடைபெறுவதை, ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக் குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து இன்று அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.