நூற்றாண்டு விழாவில் 102 வயது முன்னாள் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் கவுரவித்தது நெல்லையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பல நல்ல மனிதர்களின் தியாகத்தால்1923  ம் ஆண்டு ஜுலை 2 ம் தேதி தொடங்கப்பட்டு  இன்று 2023 ல் நூற்றாண்டை கொண்டாடி வருகிறது தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி.


கல்லூரியை தொடங்குவதற்கான நிதியை பெறுவதற்கு திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் அப்போதே போட்டி இருந்துள்ளது. மிகவும் கல்வியில் மிகவும் பின்தங்கி இருக்கும் திருநெல்வேலியில் தொடங்க வேண்டும் என பாதிரியார் பெரு முயற்சி எடுத்து போராடியதன் விளைவாக 1923 ம் ஆண்டு தூய சவேரியார் கல்லூரி கல்வி பணியை தொடங்கியது. இதனால் 2 ஆண்டுகள் கழித்து 1925 ம் ஆண்டுதான் சென்னை லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது.


திருச்சி தூய வளனார் கல்லூரி,  நெல்லை தூய சவேரியார் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி மூன்றும் ஏசு சபையால் நடத்தப்பட்டாலும், ரோமன் கத்தோலிக் திருச்சபைக்கு சொந்தமானது. 1880 ம் ஆண்டு முதல் பாளையங்கோட்டையில் தூய சவேரியார் பள்ளி இயங்கி வந்த நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக கல்லூரி வேண்டுமென பாதிரியார் லெபோ என்பவர் எடுத்த தீவிர முயற்சி காரணமாக உருவானது இந்த கல்லூரி.


ஆரம்பத்தில் 25 மாணவர்களை கொண்டு உருவான இந்த கல்லூரி இன்று 4,600 மாணவ மாணவிகள் படிக்கும் கல்வி கூடமாக உயர்ந்து நிற்கிறது. இளங்கலையில் 18 துறைகள், முதுகலையில் 16 துறைகளும், ஆராய்ச்சி படிப்பில் 12 துறைகளும் உள்ளது. மேலும் 200 ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் என 100 பேர் என மொத்தம் 300 பேர் இந்த கல்விக் கூடத்தில் பயின்று வருகின்றனர்.




இந்த நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு வந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 85 வயது ஓய்வு பெற்ற பேராசிரியர் ஞானராஜ் கூறும்போது, ’’நமது கல்லூரி நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில் 102 வயது ஆன எனது பேராசிரியர் நமது தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றிய திரு நாராயணன் சென்னையில் இருக்கிறார்.  அவரை வரவழைத்து சிறப்பு செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.


பின் கல்லூரியின் முதல்வர் மரியதாஸ் மற்றும் கல்லூரி அதிபர் ஜெரோம் மற்றும் புஷ்பராஜ் ஆகிய பாதிரியார்கள் மேற்கொண்ட தொடர் முயற்சி காரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற கல்லூரி நூற்றாண்டு திருவிழாவில் 102 வயது நிரம்பிய முன்னாள் வேதியியல் துறை பேராசிரியரும், இதே கல்லூரியின் மாணவருமான நாராயணன் மற்றும் அவரது ஐந்து மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய பேராசிரியர் நாராயணன், 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமர்ந்து இருந்து கண் கண்ணாடி ஏதும் அணியாமல், மேடையில் சிறப்புரை ஆற்றி மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.




நூற்றாண்டை தொட்டிருக்கும் இந்த கல்லூரியில் 102 வயது முன்னாள் மாணவர் பேராசிரியர் நாராயணன், தனது அனுபவங்கள் குறித்து கூறினார்,  இதில் 1936 முதல் 1938 ம் ஆண்டு வரை தூய சவேரியார் கல்லூரியில் படித்துள்ளார். 1941 முதல் 1947 வரை அதே கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1936 ஆம் ஆண்டு கணக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பெயருடன் குறிப்பிடுகிறார். மேலும், ’’மாணவர்கள் கல்வி கற்கும் போது ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதித்து பழக வேண்டும். கல்லூரி படிப்பின் போது அரசியலில் ஈடுபடக்கூடாது. கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அரசியல் உள்பட எதிலும் ஈடுபட்டுக் கொள்ளலாம். ஜாதி, மத, பேதம் பார்த்து பழகக் கூடாது’’ எனக் கூறியவர், தன்னிடம் படித்த மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என அவர்களை நினைவு கூர்ந்தார்.


மாணவர் ராஜகுரு என்பவர் குறித்து கூறும்போது, ’’மிக நேர்மையுடன் பணியாற்றுவேன் என கூறி காவல் துறையில் சேர்ந்த எனது மாணவர் ராஜகுரு. ஆனால் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி உயிரிழந்தபோது அவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராஜகுருவும் உயிரிழந்திருந்தார். இதுவரை என் வாழ்வில் நான் அழுது கண்ணீர் விட்டது ராஜகுரு உயிரிழப்பின் போது மட்டும் தான் என வேதனையுடன் நினைவலைகளை பகிர்ந்தார்.


வயது 102 உணவில் பெரிதாய் மாற்றமில்லை. சுகர், பிரஷர் இல்லை, காய்ச்சல் கூட வந்தது இல்லை. மனமுழுக்க மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கல்லூரி நிகழ்வில் மாணவ மாணவிகள் மற்றும் நிதி அமைச்சருடன்  உரையாடியது உற்சாகமாக இருந்தது. அனைவரின் அன்பு என்னை திக்கு முக்காட செய்தது. மாணவர்கள் தொடங்கி பேராசிரியர்கள் குருமார்கள் என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறினார்.