பிஹார் மாநிலத்தில் கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிபுரியும் இடங்களில் கலாச்சாரத்தைக் காக்கும் வகையில், இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பிஹார் கல்வித்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில், சில அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகத்துக்கு, அலுவலக கலாச்சாரத்தை மீறிய ஆடைகளை அணிவதாகத் தகவல் கிடைத்துள்ளது. கல்வித்துறை அலுவலகங்களுக்கு கேஷுவல் உடைகளை அணிவது அலுவலக் நடைமுறைகளுக்கு எதிரானது. 


இதனால் அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் ஃபார்மல் உடைகளில் மட்டுமே வர வேண்டும். எந்தவிதமான கேஷுவல் உடைகளையும் குறிப்பாக ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகளை அணியக்கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம், மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திர சேகரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. முன்னதாக, பிஹார் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏப்ரல் மாதத்தில், அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ்- டிஷர்ட் அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஊழியர்கள் கட்டாயம் ஃபார்மல் ஆடைகளை அணிந்து, ஐடி கார்டுகளை அணிந்திருக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. 


அதேபோல 2019-ம் ஆண்டில் தலைமைச் செயலகத்தில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு பிஹார் மாநில அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சார்பிலும் இது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.


அசாமிலும் ஆடைக் கட்டுப்பாடு அமல்


முன்னதாக, அசாம் மாநிலத்திலும் கடந்த மாதம் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என விளக்கமும் அளிக்கப்பட்டது. 


இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ’’கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிவதாக எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 


ஆனால் ஆசிரியர்கள் விரும்பிய ஆடைகளை எல்லாம் அணிவது, பெருமளவிலான மக்கள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஆசிரியர்கள் பணியின்போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பணியிடத்திற்கு ஏற்ற நாகரீகம்


ஆசிரியர்களின் ஆடைக் கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற நாகரீகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தாங்கள் மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் கொண்டு, அனைத்து கல்வி நிலையங்களை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் ஆடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.