சென்னையில் முக்கிய இடங்களில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வீட்டில் கிட்டத்தட்ட 17 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்ற போது, செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம், அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு செந்தில்பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கி, இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என தெரிவித்திருந்தது. இதற்கு அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என ஜூன் 16 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு பதிலடி கொடுத்தது. இந்நிலையில் குற்ற நடவடிக்கைகள் செந்தில் பாலாஜி எதிர்கொள்வதால், அமைச்சராக இருக்கும் பட்சத்தில் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், திமுக தொண்டர் –வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகள் உடைய அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் சுமார் 44% அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்றும், அவர்களை பதவியில் இருந்து நீக்க சொல்லி கடிதம் எழுதுவாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.