கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இதுவரை அம்பேத்கர் ஆய்வுகள் மற்றும் அம்பேத்கர் இருக்கை அமைக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது


2007ம் ஆண்டு பிப்ரவரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்  அம்பேத்கர் ஆய்வுகள் மற்றும் அம்பேத்கர் இருக்கை அமைப்பதற்கான முன்மொழிவை சிண்டிகேட் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஒப்புதல் அளித்தார். அந்த நேரத்தில் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் அம்பேத்கர் அறக்கட்டளை ரூ.50 லட்சத்தை மானியமாக வழங்க ஒப்புக்கொண்டது. அது பல்வேறு வசதிகளில் அம்பேத்கரின் பணி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காகத் தேவையான வசதிகளை கொடுக்கவும், தனி ப்ளாக்கை உருவாக்கிக் கொடுக்கவும் பல்கலைக்கழகத்தை கேட்டுக்கொண்டது.




ஆனால் 14 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அம்பேத்கர் ஆய்வுகள் மற்றும் அம்பேத்கர் இருக்கை அமைக்கப்படவில்லை. இது பல்கலைக்கழக நிர்வாகத்தில் பாகுபாடு என்றும், பட்டியலின எதிர்ப்பு அணுகுமுறை எனவும் சிண்டிகேட் மற்றும் கல்வி கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


முன்னாள் துணை வேந்தர் கே முருகன் தான் பணியாற்றிய 3 ஆண்டுகாலத்தில் 2016ம் ஆண்டு வரையிலான பாடத்திட்டத்தை உருவாக்க 7 உறுப்பினர்கள் கொண்ட  கல்வி வாரியத்தை உருவாக்கினார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. இதுவரையில் கிடப்பிலேயே உள்ளதாக தெரிவிக்கிறது பல்கலைக்கழக வட்டாரம். இப்போதைய துணை வேந்தரான தாமரை செல்வியும் இது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது.





இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோருக்கு மனு அளித்துள்ளார் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் இளங்கோவன். அந்த மனுவில் ‘இதுவரையில் அம்பேத்கர் தொடர்பான எந்த பிரிவும் தொடங்கப்படவில்லை.  இதற்கு காரணம், துணை வேந்தர்களின் பட்டியலின எதிர்ப்பு அணுகுமுறை தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


இது பாகுபாடு இல்லாமல் வேறென்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கல்வி கவுன்சில் உறுப்பினர் பேராசிரியர் ஆண்டனி. மேலும் கேள்வியெழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக கவுன்சில் மீட்டிங்கில் நாங்கள் 3 முறை புகாரை எழுப்பியுள்ளோம். ஆனால் துணை வேந்தர் தாமரைச் செல்வி பொய்யான உறுதியை தவிர வேறு எதையுமே செய்யவில்லை என்றார்.


இது குறித்து பேசியுள்ள எம்பி ரவிக்குமார், ‘ கடந்த சில வருடங்களாக கல்வி நிலையங்கள் எப்படி இயங்குகின்றன என்பதற்கு இதுதான் சாட்சி. நிறைய துணை வேந்தர்கள் வலதுசாரி சிந்தனையுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நீதிக்கு எதிராகவே இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆளும் மாநில அரசை கட்சி சார்பில் வலியுறுத்துவோம் என்றார்.