பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் 28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிட்டார். மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். 


அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 27,866 பேருக்கு தரவரிசைப் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 5842 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீத அளவுக்கு அதிகமாகும். இது புதுமைப் பெண் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும். 


28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை


அரசுப் பள்ளி மாணவர்கள் 31,441 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த நிலையில், அகாடமிக் மற்றும் தொழிற்கல்விப் பிரிவில் மொத்தம் 28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.


இதில் 13,284 பேர் புதுமைப் பெண் திட்டத்தின் நிதி வாங்கத் தகுதியான மாணவிகள் ஆவர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 15,136 ஆண்களுக்கும் 5 மூன்றாம் பாலினத்தவருக்கும் கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது.


பொறியியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 384 பேர், பெண்கள் 72 ஆயிரத்து 558 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 17 பேர்.  இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொறியியல் தரவரிசை பட்டியலில் மொத்தம் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர்.


மாணவிகளே முதல் 3 இடங்கள்


தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ஹர்னிகா, திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். மாணவிகளே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.


அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவிகளே அதிக இடம் பிடித்துள்ளனர். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவி நிவேதிதா, கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் சரவணகுமார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.