2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் ஆகும். 


மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.


அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST -TNTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிய டெட் தேர்வு கட்டாயம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  


இதை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


குறிப்பாக 27.09.2011-க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.