Kalaingar Karunanidhi : காலத்தால் அழியாத கலைஞரின் 65 ஆண்டுகால சினிமா பயணம் ஒரு பார்வை... 

சுமார் 65 ஆண்டுகாலம் திரைத்துறையில் செம்மையாக பணியாற்றிய கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான கலைஞராகவே வாழ்ந்தவர்.

Continues below advertisement

தமிழகத்தில் சினிமா என்பது ஒரு கலையின் வடிவமாக பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது என்பதையும் தாண்டி மக்களின் உணர்வுகளோடு ஒன்றாக கலந்து விடுகிறது. பழகிப்போன கதைகளையே படமாக திரும்ப திரும்ப  எடுத்து வந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த கருத்துக்களை சினிமா மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி. சினிமாவின் சக்தியை முழுமையாக ஆக்ரமித்தவர் அவர் மட்டுமே என்பதை மறுக்கவே முடியாது. 

Continues below advertisement

 

தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது  வசனகர்த்தாவாக எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்துள்ளார். அதில்  மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ரூ. 250 சம்பளம் என்றால் வாசன் எழுதிய கலைஞருக்கு ரூ. 500 சம்பளம் வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பாட்டு புத்தகம் எந்த அளவிற்கு விற்பனையாகுமா அந்த அளவிற்கு படு ஜோராக வசனப் புத்தகம் விற்பனையாகி சாதனை படைத்தது. 

 

1940 - 50 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான வசனங்களின் சமஸ்கிருதம், தெலுங்கு வசனங்களின் வாசனை இருந்தது. அவற்றை களைந்து எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி மாற்றிய பெருமை கலைஞரையே  சேரும். இவரை பல படங்கள் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும். அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என ஏதாவது ஒரு முக்கியமான கருத்தை மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர் கலைஞர். 

 

சினிமாவை கடந்தும் அவர் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டு இருந்தார். சுமார் 65 ஆண்டுகாலம் திரைத்துறையில் செம்மையாக பணியாற்றிய கருணாநிதி கடைசியாக வசனம் எழுதியது பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'பொன்னர் சங்கர்' படத்திற்காக தான். தனது 92 வயதில் கூட 'இராமானுஜர்' தொடருக்காக வசனங்களை எழுதி இருந்தார். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது. 'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா. அன்று முதல் அனைவராலும் ஆவர் கலைஞர் என்றே கொண்டாடப்பட்டார். தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான கலைஞராகவே திகழ்ந்தவர்  கலைஞர் கருணாநிதி.   

Continues below advertisement
Sponsored Links by Taboola