ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 7ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம். 


வயது வரம்பு


ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்ச்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம்‌ 11.6 ஆண்டுகள்‌, அதிகபட்சம்‌ 13 ஆண்டுகள்‌ (அதாவது 02.07.2011-ல் இருந்து 01.01.2013-க்குள்‌ பிறந்திருக்க வேண்டும்‌). மாணவர்‌ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 02.12.2023 அன்று முற்பகல், பிற்பகலில் நடைபெற உள்ளது.


ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 25 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 8ஆம் வகுப்புக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பங்களை அந்தந்த மாநில அரசுகளிடமே சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தயக்கமின்றி, ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.



தேர்வு முறை   


1. எழுத்துத் தேர்வு 


ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்)
கணிதம் (200 மதிப்பெண்கள்)
பொது அறிவு (75 மதிப்பெண்கள்)


இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு கேட்கப்படும். இதில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது முக்கியம். 


2. நுழைவுத் தேர்வு


நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, நேர்காணல் 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மாணவர்களின் அறிவு, ஆளுமை, தன்னம்பிக்கை மதிப்பீடு செய்யப்படும். இதில் குறைந்தபட்சமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம். 


3. மருத்துவப் பரிசோதனை


கடைசியாக மருத்துவப் பரிசோதனையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டியது முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். எனினும் அதிக மக்கள் தொகை கொண்ட சில மாநிலங்களில் இருந்து 2 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி ஜுலை 2024 பருவத்தில்‌ மாணவர்கள்‌ சேர்வதற்கு 7-ஆம்‌ வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்‌ மற்றும்‌ படித்து முடித்த (01.07.2024 அன்று வரை) தகுதியான ஆண்‌ மற்றும்‌ பெண்‌ விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 


தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டாளர்‌, தமிழ்நாடு அரசு பணியாளர்கள்‌ தேர்வாணையம்‌, டிஎன்பிஎஸ்சி சாலை, பூங்கா நகர்‌ சென்னை- 600 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பதாரர்கள் 15.10.2023 அன்று மாலை‌ 05.45-க்கு முன்‌ அனுப்ப வேண்டும். 


தேர்வுக்கான பாடத்திட்டம்‌ மற்றும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு  https://rimc.gov.in/ என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து பார்க்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்‌. 


தேர்வு குறித்து முழுமையாக அறிய https://rimc.gov.in/Notification%20for%20RIMC%20Entrance%20Exam%20Dec%202023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.