மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலர் தனக்கு முன்னால் இருச்சக்கர வாகனத்தில் சென்ற நபரை சாதி ரீதியாக திட்டி, தாக்குதலில் ஈடுப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 காவல் ஆய்வாளர் சாதி பெயர் குறிப்பிட்டு திட்டியதாக புகார்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் பகுதியில் சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் செல்போனில் அழைப்பு வந்ததால், வாகனத்தை இடதுபுறமாக ஓரங்கட்டியுள்ளார். அப்போது, பின்னால் வந்த காவல் ஆய்வாளர் நிலை தடுமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து, அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும். அதை அந்த நபர் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர், அந்த நபரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை கழகம் அருகே தாக்கியதாகவும் கூறப்படுகிறது.




காவலரை தட்டி கேட்ட திவிக மாவட்ட செயலாளர் 


பின்னர்,  அந்த காவல் ஆய்வாளரிடம் இருந்து தப்பி இளைஞர் வாகனத்தில் ஏறி சென்ற நிலையில், அவரை மீண்டும் விடாமல் மகாதானத் தெரு அருகே துரத்திப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து என்ன பிரச்னை, எனத் தட்டிக்கேட்டுள்ளார்.


காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் 


அப்போது, காவல் ஆய்வாளர் குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு அந்த இருச்சக்கர வாகனத்தை இயக்கி வந்த நபரையும் அவரது சமூகத்தை பெயரை குறிப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த காவல் ஆய்வாளர் அந்த இளைஞரை மயிலாடுதுறை காவல் நிலைய காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார்.


காவல் ஆய்வாளர் மீது புகார் மனு 


இது குறித்து, தி.வி.க. மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து பேச்சு வார்த்தை நடத்திய பின் அங்கிருந்து அந்த இளைஞரை காவல்துறையினர் விடுவித்தனர். இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் அந்த காவல் ஆய்வாளர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். 




திவிக மாவட்ட செயலாளரின் மனுவின் சாராம்சம் 


இது குறித்து  திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் ,  கூறுகையில்; சீருடை அணியாமல் நடுரோட்டில் இளைஞரை தாக்கி, சாதிய தாக்குதல் நிகழ்த்தியதாக குறிப்பிட்டு மயிலாடுதுறை காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளோம். மேலும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் செய்ய உள்ளோம். இப்பிரச்னையில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இதைபோல் சாதி ரீதியாக ஒருவரைத் தாக்கி நிலையில் அதனைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.


காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் 


இந்நிலையில் மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் சனிக்கிழமை சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில் விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து. மேலும் இதுகுறித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.