மாநில அரசு பல்கலைக்கழகங்களில்‌ காலியாக உள்ள துணைவேந்தர்‌ பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபரை தேர்ந்தெடுக்க தேடுதல்‌ குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது மாநில அரசு பல்கலைக்கழக சட்ட பிரிவுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவுதான் என்று உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி.செழியன்‌ தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அமைச்சர்‌ முனைவர்‌ கோவி.செழியன்‌ தெரிவித்து உள்ளதாவது:


மாநில அரசு பல்கலைக்கழகங்களின்‌ சட்டப்‌ பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல்‌ குழுவினால்‌ பரிந்துரைக்கப்படும்‌ மூன்று நபர்களில்‌ ஒருவர்‌ சார்ந்த பல்கலைக்கழகங்களின்‌ துணைவேந்தராக மாண்புமிகு ஆளுநர்‌- வேந்தரால்‌ நியமனம்‌ செய்யப்படுவார்‌. இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.


அதன்படியே, தமிழ்நாடு அரசால்‌ பாரதியார்‌ மற்றும்‌ தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு, ஆளுநர்‌ அலுவலக கடிதத்தில்‌, சார்ந்த பல்கலைக்கழகங்களின்‌ சட்டவிதிகளின்‌ படி மூன்று பேர்‌ அடங்கிய தேடுதல்‌ குழு அமைத்து அரசிதழில்‌ வெளியிட தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில்‌ அரசால்‌ மூன்று பேர்‌ அடங்கிய தேடுதல்‌ குழு அரசிதழில்‌ அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.


ஆனால்‌, ஆளுநர்‌ தன்னிச்சையாக, பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ 2018 ஆம்‌ ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின்‌ தேடுதல்‌ குழுக்களில்‌ நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ தலைவரால்‌ பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவரை நியமனம்‌ செய்து பாரதியார்‌, தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல்‌ மற்றும்‌ சென்னை பல்கலைக்கழகங்களுக்கு நான்கு பேர்‌ அடங்கிய தேடுதல்‌ குழு அமைத்து 06.09.2023 நாளிட்ட அறிவிக்கைகளை வெளியிட்டார்‌. ஆனால்‌, தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரைத்‌ தேர்வு செய்வதற்கு அப்பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர்‌ மட்டுமே அடங்கிய தேடுதல்‌ குழு அமைத்து அரசாணை வெளியிட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.


தேடுதல் குழுவை ஏற்காத ஆளுநர்


ஆனால்‌, ஆளுநர்‌ இத்தேடுதல்‌ குழுவினை ஏற்காமல்‌, பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ 2018 ஆம்‌ ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின்‌ தேடுதல்‌ குழுக்களில்‌ நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ தலைவரால்‌ பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்‌ ஒருவரை நியமனம்‌ செய்ய முதலமைச்சருக்கு முகவரியிட்ட கடிதம்‌ வாயிலாக வலியுறுத்தினார்‌.


பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும்‌ தேடுதல்‌ குழுவை அறிவிக்கையாக வெளியிடுமாறு ஆளுநர்‌ அவர்கள்‌ அரசிற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, ஆளுநர்‌ அவர்கள்‌ தன்னிச்சையாக தேடுதல்‌ குழுவினை அமைத்து அறிவிக்கை வெளியிடுவதற்கு அவருக்கு அதிகாரம்‌ இல்லை.


அதனால்‌ மேற்கண்ட ஆளுநர்‌ கடிதம்‌ குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து, மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல்‌ குழுக்கள்‌ அரசாணையின்படியும்‌, அந்தந்த பல்கலைக்கழக சட்டப்படியும்‌தான்‌ உள்ளதால்‌, நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுத்‌தலைவரால்‌ பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச்‌ சேர்த்து மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல்‌ குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்‌ எழவில்லை என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஆளுநருக்குத்‌தெரிவிக்கப்பட்டது.


நிலுவையில் உள்ள வழக்கு!


ஆளுநரின்‌ மேற்கண்ட அறிவிக்கைகளை எதிர்த்து, அரசு உச்சநீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில்‌ நிலுவையில் உள்ளது.


தமிழ்நாட்டில்‌ உள்ள பல்கலைக்கழகங்களின்‌ சட்ட விதிகளின்படி துணைவேந்தர்‌ அவர்களை தேர்வு செய்வதற்கு அமைக்கப்படும்‌ தேடுதல்‌ குழுவில்‌ மாண்புமிகு ஆளுநர்‌ அவர்களால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌, அரசால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌ மற்றும்‌ சார்ந்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு / ஆட்சிப்பேரவையினால்‌ பரிந்துரைக்கப்படும்‌ உறுப்பினர்‌ ஆகிய மூன்று நபர்களைக்‌ கொண்ட தேடுதல்‌ குழு அமைக்கப்படும்‌.


உச்சநீதிமன்றத்தால்‌, ஜெகதீஷ்‌ பிரசாத்‌ சர்மா மற்றும்‌ பலர்‌ பீகார்‌ மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில்‌, "கல்வி என்பது அரசியல்‌ சாசனத்தின்‌ பொதுப்பட்டியலில்‌ (பிரிவு-3) வருவதால்‌, மாநில அரசானது கல்வியில்‌ தனது சட்டங்களை சொந்தமாக வகுக்க சுதந்திரமும்‌ அதிகாரமும்‌ கொண்டுள்ளதால்‌, பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை எனவும்‌, பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு சட்டம்‌ 1956ன்‌ பிரிவு 26ல்‌ குறிப்பிட்டுள்ளபடி, எந்தெந்த நெறிமுறைகளை ஏற்க விரும்புகிறதோ அவற்றை மட்டுமே பின்பற்றலாம்‌ என தீர்ப்பு வழங்கியுள்ளது."


தமிழ்நாடு அரசுக்கு உரிய சட்ட அதிகாரம்‌ உள்ளது


எனவே, அரசாணை (நிலை) எண்‌, 5, உயர்கல்வி (எச்‌1) துறை, நாள்‌ 11.01.2021 மூலம்‌, பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ நெறிமுறைகள்‌ 2018-இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறை 7.3 (னை ஏற்காத காரணத்தாலும்‌, உச்ச நீதிமன்றத்தால்‌, ஜெகதீஷ்‌ பிரசாத்‌ சர்மா மற்றும்‌ சிலர்‌ பீகார்‌ மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில்‌ வெளியிடப்பட்ட தீர்ப்பின்‌ அடிப்படையிலும்‌, மாநில பல்லைக்கழகங்களுக்கு சார்ந்த சட்டவிதிகளின்படி தேடுதல்‌ குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிய சட்ட அதிகாரம்‌ / உரிமை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசாணை (டி) எண்‌ 270 உயர்‌ கல்வி (எச்‌1) துறை நாள்‌ 09.12.2024 மூலம்‌ அடுத்த துணைவேந்தர்‌ நியமனம்‌ செய்வதற்கு மூன்று பேர்‌ அடங்கிய தேடுதல்‌ குழு அமைத்து ஆணைகள்‌ வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில்‌ வெளியிடப்பட்டது.


மேலும்‌, அண்ணா பல்கலைக்கழகத்திற்கும்‌ அடுத்த துணைவேந்தர்‌ நியமனம்‌ செய்வது தொடர்பாக, அடங்கிய தேடுதல்‌ குழு அமைத்து ஆணைகள்  வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில்‌ வெளியிடப்பட்டது. இதில்‌ எவ்வித விதி மீறல்களும்‌ இல்லை.


வேந்தர்‌ என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும்‌ நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும்‌ஏற்புடையது அல்ல. ஆளுநர்‌ சட்டத்தை தவறாக தன்‌ கையில்‌ எடுத்துச்‌ செயல்முறைகள்‌ வெளியிடும்‌ போக்கை அரசு கவனித்துக்‌ கொண்டுதான்‌ இருக்கிறது. மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல்‌ பல்வேறு இடையூறுகளை பலவகையிலும்‌ ஆளுநர்‌ செய்து வருகிறார்‌.


மாணவர்கள்‌ நலனுக்கு எதிரானது


அதன்‌ ஒரு பகுதிதான்‌ துணை வேந்தர்‌ தேடுதல்‌ குழு அமைப்பு விவகாரத்தில்‌ ஆளுநர்‌ அனுப்பி உள்ள கடிதம்‌. பல்கலைக்கழகங்கள்‌ பல மாதங்களாக துணை வேந்தர்‌ இல்லாமல்‌ செயல்படுவதைப்‌ பற்றி சிறிதும்‌ கவலைப்படாமல்‌ ஆளுநர்‌ நடந்து கொள்ளவது மாணவர்கள்‌ நலனுக்கு எதிரானது ஆகும்‌.


மாணவர்கள்‌ நலன்‌ கருதி மாநில ஆளுநர்‌ பல்கலைக்கழகச்‌ சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல்‌ குழுவிற்கு ஒப்புதல்‌ அளித்திடுவதே அவர் வகிக்கும்‌ பதவிக்கு அழகாகும்‌. மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றம்‌ மூலம்‌ நிறைவேற்றப்படும்‌ சட்டங்களுக்கு ஒப்புதல்‌ வழங்குவது ஆளுநரின்‌ கடமை.


ஆனால்‌ அதனை செய்யாமல்‌ அரசால்‌நிறைவேற்றப்படும்‌ மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பலவற்றை நிராகரித்து வருகிறார்‌. இதிலும்‌ பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ ஒரு பிரதிநிதியாக செயல்பட்டு அரசு பல்கலைக்கழக சட்டத்தினை புறம்தள்ளி பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவிற்கு ஏற்றார்போல்‌ சாதகமாக செயல்பட்டு வருகிறார்‌. இனியாவது ஆளுநர்‌ தனது செயல்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டுமென உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.