’’சாப்பாடு கொண்டு வர்றாருனு நினைச்சோம், ஆனா அந்த பொண்ண சாகடிக்க வருவானு தெரியாம போச்சு’’ என தஞ்சை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா, கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த பின்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னைமனை பகுதியை சேர்ந்த முத்து மற்றும் ராணி தம்பதியின் மூத்த மகள் ரமணி. 24 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் பாடம் எடுத்து வந்துள்ளார் ரமணி.


இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மதன்குமாருடன் ரமணிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மதன்குமார், சிங்கப்பூரில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய மதன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே ரமணிக்கும், மதன்குமாருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, இருவரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.


பழக்க வழக்கம் சரியில்லாத மதன்குமார்


இந்நிலையில் ரமணியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த மதன்குமார் ரமணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ரமணியின் உறவினர் ஒருவர் மதன்குமாரின் பழக்க வழக்கம் சரியில்லாததாக கூறியதால் மதன்குமாருக்கு பெண் கொடுக்க ரமணியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதையடுத்து ரமணியும் மதன்குமாருடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்துள்ளார்.


இந்நிலையில் மதன்குமார் பலமுறை ரமணியை சந்தித்து இதுகுறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. நேற்று முன் தினமும் வழக்கம்போல் மதன் ரமணியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு ரமணி மறுப்பு தெரிவித்து கடுமையாக திட்டியதோடு இனிமேல் தன்னிடம் வந்து பேசவேண்டாம் என கூறிவிட்டாராம்.இந்நிலையில் தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மதன் ரமணியை கொலை செய்ய முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.


ரமணி டீச்சர் எங்கே?


இதனையடுத்து நேற்று (நவ.20) காலை ரமணி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பிற ஆசிரியர்கள் வகுப்பறைக்கு சென்று விட்ட நிலையில், முதல் வகுப்பு தனக்கு FREE HOUR என்பதால் ரமணி STAFF ROOM-ல் இருந்துள்ளார். இந்நிலையில் காலை 10.10 மணிக்கு பள்ளிக்குள் நுழைந்த மதன்குமார், அங்குள்ள மாணவர்களிடம் ‘’ரமணி டீச்சர் எங்கே?’’ என கேட்டுள்ளார். மாணவர்களோ STAFF ROOM-ஐ கைகாட்ட நேராக அங்கு சென்ற மதன், மீண்டும் ரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.




இதையடுத்து ரமணி, ’உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது’ எனவும் ’உடனே பள்ளியை விட்டு வெளியே போ’ எனவும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ரமணி வலியால் அலறிக்கொண்டே தரையில் விழுத்துள்ளார். ரமணியின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் பதறி அடித்துக்கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் ரமணி விழுந்து கிடந்துள்ளார்.


சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா பேட்டி


அங்கிருந்து தப்பியோட முயன்ற மதன்குமாரை கத்தியுடன் மடக்கிப்பிடித்தனர். பின்னர் ரமணியை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையி ரமணியின் கொலை குறித்து அதை நேரில் பார்த்த அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.


அவர் கூறும்போது, ’’மதன்குமார் பள்ளிக்குள் வந்ததை பார்த்தோம், அவர் மாணவருக்கு சாப்பாடு கொடுக்கத்தான் வருகிறார் என நினைத்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆசிரியர்களும்  வகுப்பறையில் பிஸியாக இருந்தனர்.




சாப்பாடு கொண்டு வர்றார்னு நினைச்சோம்


நேராக ஸ்டாஃப் ரூமுக்கு போன மதன்குமார், ரமணி டீச்சரிடம் 2 நிமிடம்தான் பேசியிருப்பார். என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் திடீரென அலறல் சத்தம் கேட்டது, உள்ளே போய் பார்த்தால் ரமணி கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்தார். மருத்துவமனைக்கு போவதற்குள் இறந்துவிட்டார்.


சாப்பாடு கொண்டு வர்றார்னு நினைச்சோம். இப்படி சாகடிக்க வருவானு நினைச்சுக்கூட பாக்கல’’ என மஞ்சுளா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.