தஞ்சாவூர்: தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் இயங்கி வரும் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு கைம்பெண்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதர் தெரசா அன்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் 47 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.87 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கைம்பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்
நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சம்பத் ராகவன், டாக்டர் ராதாபாய், முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாரத் கல்லூரி குழும செயலாளர் புனிதா கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கைம்பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழவும், தங்களாலும் சமூகத்தில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு சாதனை படைத்த கைம்பெண்கள் பற்றிய உதாரணங்களோடு விளக்கி கூறினார்.
கைம்பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், மானியங்கள்
தமிழ்நாடு மாநில கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினரும், மனநல மருத்துவருமான ரேணுகா ஆலிவர், மகளிர் நல வாரியத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள், அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காணிக்கை அன்னை சபை ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரோசி கைம்பெண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றியும் தனியாகவோ, குழுவாகவோ செய்யக்கூடிய பல்வேறு தொழில்கள் குறித்தும், படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், அதற்கு வங்கிகள் அளிக்கும் கடன்கள், அரசு மானியங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கைம்பெண்களின் குடும்பத்தில் நன்கு படிக்கக்கூடிய 47 மாணவ, மாணவிகளுக்கு மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் ரூ. 4,87,400/-க்கான கல்வி உதவித் தொகையை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்கள் ஷார்ஜாவின் அரசு சிறப்பு திட்டங்களின் இயக்குநரான எட்வின் மரிய அரசு, வீரகுறிச்சி அருள் மேக்ஸ் பவுண்டேசன் இயக்குநர் அருள் சூசை ஆகியோர் மதர் தெரசா பவுண்டேசன் செய்துவரும் பணிகளை பாராட்டி பேசினர்.
பரிசுப்பொருட்கள் வழங்கல்
மேலும் அருள் மேக்ஸ் பவுண்டேசன் சார்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட கைம்பெணகளுக்கு தலா ரூ. 1,000/- மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து வரவேற்று பேசுகையில், கைம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகளைப் பெற பவுண்டேசன் உதவும். பவுண்டேசன் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் கைம்பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேவைப்படுபவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கமுடியும். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மதர் தெரசா பவுண்டேசன் நிர்வாக மேலாளர் மெர்சி. திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராணி, ரேணுகா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டியா, வர்ஷினி, தன்னார்வ தொண்டர்கள் குருமூர்த்தி, ஹர்ஷன், வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.