கல்கி 2898 AD
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் கடந்த வாரம் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன் பற்றி படக்குழுவினர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கமல் நடிக்கும் சுப்ரீன் யாஸ்கின்
கல்கி படத்தின் முக்கிய வில்லன் சுப்ரீம் யாஸ்கின் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்வப்னா தத் பேசியபோது “ இந்தப் படத்தில் எங்களுக்கு ரொம்பவும் சவாலானதாக இருந்தது சுப்ரீம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தது தான். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது ஆனால் முக்கியமான யாஸ்கின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. பிரபாஸ் அமிதாப் பச்சன் நடித்திருக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகரான ஒரு நடிகர் என்று யோசிக்கும்போது எங்கள் மனதிற்கு வந்த ஒரே நபர் கமல்தான். கமல் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்வதற்கே ஒரு வருடம் ஆகியது.
நான் நடித்து என்ன செய்யப் போகிறேன்
யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கமல் ஒன்றரை ஆண்டுகள் யோசித்ததாக நடிகர் பிரபாஸ் தெரிவித்தார். இது குறித்து கமல் பேசுகையில் “ பிரபாஸ் , அமிதாப் பச்சன் மாதிரியான கதாபாத்திரங்கள் இருக்கையில் நான் இதில் புதிதாக செய்வதற்கு என்ன இருக்கிறது என்பது தான் என் கேள்வியாக இருந்தது. நான் வில்லனாக நடிக்க யோசிக்கவில்லை. பல படங்களில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். “ என்று கமல் தெரிவித்தார்