தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும், கற்றலை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ மாணவிகளின் தனித்திறமை செயல்பாடுகளை குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் வெகுவாக பாராட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும், கற்றலை கொண்டாடுவோம் என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுந்தரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் என் மேடை, என் பேச்சு, பாடல் கதை கூறுதல், வாசித்தல், வினாடி வினா பொம்மலாட்டம், விடுகதை, கணித செயல்பாடுகளில் கழித்தல் மாணவ மாணவிகளின் தனித்திறமை போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பாராட்டினார்.





ஆசிரியை அமுதா மாணவ, மாணவிகள் தொடர் வண்டியில் செல்லும்போது ஸ்டார்ட், ஸ்டாப் போன்ற சைகைகளை குறித்து விளக்கினார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர் ஜன்னத் கனி நன்றி கூறினார். இதில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவ, மாணவிகளின் கல்வி செயல்பாடுகள் குறைந்தது. இதனால் இதை சரி செய்யும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் உயர்ந்து வருகிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொலைநோக்கு 2025 க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதை எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன் படி தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ் ஆங்கிலம் கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

இதன் காரணமாக 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் தனித்திறன்களும் இதன்வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் அதிகரித்து வருகிறது.