Crime : ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்சல் தர தாமதம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலுகம் அருகே ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவரது கடைக்கு அதிக நபர்கள் வந்து செல்கின்றனர். எந்த நேரத்தில் இவரது கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கும். இவரது கடையில் வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளாமல் இவரே வேலை செய்து வருகிறார். இதனால் கதிரேசனே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், முஷ்டகுறிச்சியைச் சேர்ந்தவர் வழிவிட்டான் (45). இவர் நேற்று மதியம் கமுதியில் உள்ள கதிரேசன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். பார்சல் சாப்பாடு வாங்க வந்த இவர், தாமதமாகும் என்று கதிரேசன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரமடைந்த வழிவிட்டான் அருகில் இருக்கும் சமையல் கரண்டியால் கதிரேசனை தலையில் பயங்கரமாக அடித்துள்ளார்.
விரலை கடித்து துப்பியவர்:
அடித்ததோடு இல்லாமல், கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்தார். அப்போது, வழிவிட்டான் ஆத்திரத்துடன் கடித்ததில் கதிரேசனின் விரல் துண்டானது. பின்னர், துண்டான விரலை ஹோட்டலுக்கு முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயிலே வழிவிட்டான் துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர். கதிரேசனின் துண்டான ஆள்காட்டி விரலின் தேடிப்பார்த்தனர்.
ஆனால் விரல் கிடைக்கவில்லை. இதையடுத்து, வலியில் துடிதுடித்த கதிரேசனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஹோட்டல் உரிமையாளரின் கை விரலை கடித்து துப்பிய வழிவிட்டானை போலீசார் கைது செய்தனர். சாப்பாடு பார்சல் கட்ட தாமதம் ஆனதால் ஹோட்டல் உரிமையாளரை கடுமையாக தாக்கியதுடன், அவரது கை விரலை வாடிக்கையாளர் கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க