இந்தியாவில் முதல் முறையாக மருத்துவப் படிப்பு பாடங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல், உத்தரபிரதேச மாநிலத்திலும் மருத்துவம், இன்ஜினியரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழ் வழி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கின்றன.

 

முதற்கட்டமாக 'கிரேஸ் அனாடமி பார் ஸ்டூடன்ஸ்', 'கைடன் அன்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி', 'பெய்லி அன்ட் லவ்ஸ் சாட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி(பாகம்-1)', 'முதலியார் அன்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ்டெட்ரைக்ஸ்' ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (டி.என்.டி.இ.எஸ்.சி.) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பு இதை இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொழி பெயர்க்கும் பணிகளில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 30 பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டு இருக்கின்றனர். மொத்தம் 25 மருத்துவ பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 13 பாடப் புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்புகள் ஆங்கிலத்தில் இருந்த போது மாணவர்கள் சிலரால் அதை புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது என்றும், தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், இதை எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும், சிறந்த தத்துவார்த்த அறிவுடன், சிறந்த டாக்டர்களாக மாறுவார்கள் என்றும் மொழி பெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள், 'பெரும்பாலான மருத்துவச் சொற்கள் கிரேக்கம், லத்தீனில் இடம்பெற்று இருந்ததாகவும், அதை மொழி பெயர்ப்பது சவால் நிறைந்த பணியாக இருந்ததாகவும்' அவர்கள் தெரிவித்தனர். தமிழில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு படிக்க முடியும் என்றாலும், ஏற்கனவே உள்ள விதிகளின்படி, தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.