பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தகுதித் தேர்வை முடித்த ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் ஈரோட்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தொடங்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். 


என்ன பிரச்சினை?


அதிமுக அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட போட்டித் தேர்வை திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக கூறி இருந்த நிலையில், போட்டித் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. முன்னதாக, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியானது.


இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களை நியமிக்க வேண்டும் என்று தகுதித் தேர்வை முடித்த ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.


பேச்சுவார்த்தை தோல்வி


இதனால் தகுதித் தேர்வை முடித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்  போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அமைச்சர் இல்லத்தில் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.  


பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தகுதித் தேர்வை முடித்த ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அடுத்தகட்ட போராட்டம் ஈரோட்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 1) முதல் தொடங்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். 


அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு


இதற்கிடையே சம வேலைக்கு சம ஊதியம் கோரும் அரசு இடநிலை ஆசிரியர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தமிழக ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய 5 அமைப்புகளுக்கு, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த பேச்சுவார்த்தையானது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 6வது தளத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை கூட்டரங்கில்  நாளை (நவ.1) பிற்பகல் 03.30 மணி அளவில் நடைபெற உள்ளது.