ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவர் இணைந்து நடித்தப் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது என்பது ஒரு திருவிழாவுக்கு நிகராக கொண்டாடப்படும் காலம் இருந்திருக்கிறது. இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் ஒரே திரையரங்கத்தில் இருப்பது என்பது எந்த நேரம் வேண்டுமானால் வெடிக்கக்கூடிய ஒரு குண்டைப் போல்தான். அப்படி ரஜினி மற்றும் கமல் நடித்து ஒரே நாளில் இதுவரை மொத்தம்  14 படங்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி கடைசியாக 2005-ஆம் ஆண்டில் வெளியான படங்கள் சந்திரமுகி மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ். இடைப்பட்ட காலத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் குறைவாகவே இருந்திருக்கின்றன. ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்தார் என்றால் கமலின் படங்கள் இன்னும் சற்று நீண்ட காலம் கழித்தே வெளியாகின.


அஜித் - விஜய்


இந்த இடைப்பட்ட காலத்தில்  நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரின் படங்களுக்கு திரையரங்குகளில் கடுமையான போட்டிகள்  நடந்திருக்கின்றன. ரஜினி, கமல் காலம் எல்லாம் முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் இடையில் பொதுவான ஒரு புரிதல் உருவாகிவிட்டது. அதை பொய்யாக்கும் வகையில் சமீப காலத்தில் அடுத்தடுத்த படங்களில் இருவரும் நடித்து வருகிறார்கள்.


தலைவர் 170, தலைவர் 171


ஜெயிலர் படத்தின் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு முந்தை படங்கள் வசூல் ரீதியாக பின்னடைவை சந்திருந்தாலும் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரஜினி படங்களின் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. குறிப்பாக இளம் இயக்குநர்களின் பார்வையில் ரஜினியை பார்ப்பது ரசிகர்களுக்கு புதுமையான ஒரு அனுபவமாக இருக்கிறது. தற்போது த.செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரானா டகுபதி, உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். சமீக காலத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது இந்தப் படம் . மேலும் இந்தப் படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  மலையாள திரைத்துறையில் இருக்கும் திரைக்கதை எழுத்தாளர்களுடன் இணைந்து பனியாற்ற இருப்பதாவும் படத்தின் ஒரு சில பகுதிகளை ஐமாக்ஸின் படம்பிடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.


கமல்ஹாசன் 233 , 234


உலகநாயகன் கமல்ஹாசனைப் பொறுத்தவரை தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்டப் படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கும் kh233 படத்தில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இதனைத் அடுத்து 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் மனிரத்னத்துடன் இணைய இருக்கிறார் கமல். ஏ.ஆர் ரஹ்மான இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 


இவைத் தவிர்த்து பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அதே நேரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படங்களில் ஏதாவது இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்றால் அது நிச்சயம் ரஜினி கமல் ரசிகர்களுக்கு அந்த காலத்தின் திருவிழா கொண்டாட்டம்தான்.