இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளதாவது:

Continues below advertisement

’’நேற்று 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்குபெற்ற தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சார்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்னும் தேர்வர் சட்டவிரோதமாக தேர்வு அறையில் மொபைல் போனை பயன்படுத்தியபோது, தேர்வு அறை கண்காணிப்பாளரால் கையும் களவுமாக காலை 11.20 மணி அளவில் பிடிக்கப்பட்டார்.

விசாரணையிலும், அவரது தொலைபேசியை ஆய்வு செய்ததிலும், அவர் கேள்வித்தாளின் பல்வேறு பக்கங்களை தொலைபேசி மூலமாக புகைப்படம் எடுத்து, சிவகிரியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் பாண்டியராஜ் (23) மற்றும் மல்லிகா (22) ஆகியோருக்கு அனுப்பியிருந்தது தெரிய வந்தது.

Continues below advertisement

வாட்ஸ்அப் மூலம் பதில்

தொடர் விசாரணையில், மேற்படி மூவரும் முன்கூட்டியே திட்டமிட்டு கோபிகிருஷ்ணன் மேற்படி தேர்வில் வெற்றி பெறுவதற்காக சட்டவிரோதமாக வாட்ஸ்அப் மூலம் கேள்விகளைப் பெற்று அதற்கான பதில்களை அவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு தெரிவிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

எனினும், தேர்வர் கோபிகிருஷ்ணனின் நண்பர்கள், பதில்களை அவருக்கு அனுப்புவதற்கு முன்பாகவே தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் அவர் பிடிபட்டார். இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்ட மூவர் மீதும் தேர்வு முறைகேடு, மோசடி மற்றும் கூட்டு சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக குற்றாலம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர் புலன்விசாரணையில், மேற்படி மூவருடன் கோபிகிருஷ்ணனுடைய நண்பரும், போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்றவருமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் (31) என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. பிரதீப் மற்றும் மல்லிகா இருவரும் இணைந்து கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்ததும், அவ்வாறு தயார் செய்யப்பட்ட பதில்களை மல்லிகா, கோபிகிருஷ்ணனின் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பும் முன்பாக தேர்வர் பிடிபட்டதும் கண்டறியப்பட்டது.

பிரதீப் நாமக்கல் மாவட்டத்தில் கைது

மேற்படி பிரதீப் நாமக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி கோபிகிருஷ்ணன், மல்லிகா மற்றும் பாண்டியராஜ் ஆகியோர் செங்கோட்டை குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவனுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தேர்வு மையத்தில் சரிவர சோதனை மேற்கொள்ளாது, தேர்வர் தொலைபேசியுடன் தேர்வு மையத்திற்குள் சென்றது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை முடிவில் பணியில் மெத்தனமாக இருந்த காவல் அலுவலர்கள்/ அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இச்சம்பவத்தில், மேற்படி ஒரு தேர்வர் மட்டுமே முறையற்ற பலனை அடைய முயற்சித்ததும், அவர் பிடிபட்டதோடு தேர்விலிருந்து நீக்கப்பட்டு, குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது’’.

இவ்வாறு தென்காசி காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்காசியை தலைமையிடமாக கொண்ட போட்டித் தேர்வு மையத்தின் கிளை நிறுவனம்தான் நாமக்கல் பயிற்சி நிறுவனம்.  இந்த பயிற்சி மையத்தின் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடான தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காவலர் பணிக்கான போட்டி தேர்வில் முறைகேடான செயலில் ஈடுபட்டது அம்பலம் ஆகி உள்ளது.

இந்த பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர், ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.