யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (NET) 2025-க்கான விண்ணப்பத் திருத்தம் செய்ய இன்று முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்வர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து கொள்ளலாம்.
முன்னதாக விண்ணப்பப் பதிவு அக்டோபர் 7 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 10ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் நவம்பர் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
தேர்வு எப்போது?
யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருத்தங்கள் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்கள் UGC NET 2025 விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்களைச் செய்ய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றலாம்:
- ugcnet.nta.ac.in ஐப் பார்வையிடவும்: முதலில், NTA UGC NET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- திருத்த சாளர இணைப்பு: முகப்புப் பக்கத்தில், "UGC NET Application Correction Window 2025" அல்லது அது போன்ற ஒரு இணைப்பைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்யவும்.
- உள்நுழைவு: உங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- விண்ணப்பப் படிவம்: உள்நுழைந்த பிறகு, உங்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும்.
- திருத்தங்களைச் செய்யவும்: தேவையான மாற்றங்களை கவனமாகச் செய்யவும். பெயர், பிறந்த தேதி, வகைப் பிரிவு, கல்வி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை சரிபார்க்கவும்.
- சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு: அனைத்து மாற்றங்களையும் செய்த பிறகு, படிவத்தை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, எந்த பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அதன் பிறகு, திருத்தப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
- உறுதிப்படுத்தல் பக்கம்: சமர்ப்பித்த பிறகு, திருத்தப்பட்ட விண்ணப்பத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.
முக்கிய குறிப்புகள்:
- சில புலங்களில் மட்டுமே திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படும். அனைத்து புலங்களையும் திருத்த முடியாது. குறிப்பாக, பிறந்த தேதி, பிரிவு, தந்தை பெயர், தாயின் பெயர் ஆகியவற்றில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும். அதேபோல பெயர், பாலினம், புகைப்படம், கையொப்பம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி மற்றும் தேர்வு நடைபெறும் நகரம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது.
- திருத்தங்களைச் செய்யும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
- காலக்கெடு முடிந்த பிறகு எந்த திருத்தங்களும் செய்ய அனுமதிக்கப்படாது.
யுஜிசி நெட் தேர்வு என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) ஆகியவற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வாகும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது மிக அவசியம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/