தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ்நிலையம் அருகே திறந்தவெளி பார் போன்று சாலையை குடி”மகன்கள்” பயன்படுத்துவதால் பெண்கள், மாணவிகள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து விடும். உடன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பஸ் நிலையம் அருகே டாக்டர் ஜாகிர் உசேன் தெரு உள்ளது. இந்த சாலையை மகாமகம், பத்தடி பாலம் பகுதியை சேர்ந்தவா்கள், அண்ணலக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகனஓட்டுனர்கள் பஸ் நிலையத்திற்கு செல்ல குறுக்கு பாதையான பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்தும், தனியார் கட்டுமான பொருட்கள் கொட்டப்படும் பயன்படுத்த முடியாத நிலையில் இந்த சாலை இருந்தது.
பின்னர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் நீண்டகால தொடர் கோரிக்கை ஏற்று இந்த சாலையில் இருந்த கட்டுமான பொருட்களை அகற்றப்பட்டது. மேலும் இந்த சாலையும் சீரமைக்கப்பட்டது. நீண்ட கால தொடர் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வந்தனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு சென்றனர். சுற்றிக் கொண்டு செல்லாமல் இந்த சாலை வழியாக சென்றால் சுலபமாக செல்லாம். அதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காரணம் இந்த சாலை குடிமகன்களின் கூடாரமாக, திறந்தவெளி பார் போன்று மாறியே விட்டது என்று கூறப்படுகிறது. இந்த சாலை அருகே இருக்கும் டாஸ்மாக் கடை திறக்கும் வரை இந்த சாலை வெறிச்சோடி கிடக்கிறது. டாஸ்மாக் கடை திறந்தால் போதும் ஈசல் போல் குவியும் குடிமகன்கள் மறுநாள் காலை வரை இந்த சாலையை திறந்தவெளி பார் போன்று பயன்படுத்தி உருண்டு புரள்கின்றனர்.
சிலர் அதிக போதையில் அங்கேயே படுத்து தூங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. சிலர் அரை நிர்வாணமாக படுத்து கிடக்கின்றனர். மேலும் இந்த சாலையில் மின்விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இது குடிமகன்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குடிமகன்களின் அட்டகாசத்தால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் இந்த சாலை வழியாக நடந்து செல்லவே அச்சப்பட்டு நிறுத்தி விட்டனர்.
இதே போல் கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே சா்ச் ரோட்டில் இருந்து ஜான் செல்வராஜ் நகருக்கு செல்லும் இணைப்பு சாலையும் இதே போல் குடிமகன்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. தொடர்ந்து இந்த சாலையை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டுனர்களும் குடிமகன்களின் கும்மாளத்தாலும், அலப்பறையாலும் இப்பகுதி வழியாக செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர்.
மேற்கண்ட இரண்டு சாலைகளில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழித்தடங்களை யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரு சாலைகளிலும் மின்விளக்கு அமைப்பதோடு பெண்கள் அச்சமின்றி பயணம் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. குடி”மகன்கள்” அலப்பறைகளை தடுக்க போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.