தீண்டாமை விவகாரத்தில் பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் பள்ளியின் ஆசிரியர், மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெஞ்ச் டெஸ்க் எதுவும் இல்லை. பள்ளி தொடர்பாக புகார் கூறப்பட்டது ஆதாரமற்றது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில், பள்ளி மாணவர்களுக்குத் தின்பண்டம் வழங்க மறுத்து தீண்டாமை காட்டியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மகேஸ்வரன்(40) ராமச்சந்திரன் (எ)  மூர்த்தி (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெட்டிக் கடைக்கு அன்றைய தினமே சீல் வைக்கப்பட்டது.


இதற்கிடையே பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் பாகுபாடு இருப்பதாகப் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் இன்று (செப்.19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் உள்ள 23 மாணவர்களில் இன்று 10 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் யாரும் இன்று பள்ளிக்கு வரவில்லை. சாதிப் பாகுபாடு இருப்பதாகக் கூறப்பட்ட பள்ளி வகுப்பறையில், பெஞ்ச் என்பது எதுவும் இல்லை.




தொடர்ந்து வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்த முதன்மைக் கல்வி அலுவலர்,ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியின் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் விசாரணை செய்தார்.


பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ''பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெஞ்ச், டெஸ்க் எதுவும் இல்லை. பள்ளி தொடர்பாகப் புகார் கூறப்பட்டது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.


இந்நிலையில்  தீண்டாமையால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களுக்கு மதுரையில் உள்ள பல்வேறு சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று திண்பண்டங்களை வாங்கி சிம்மக்கல் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாதிக்கப்பட்ட அந்த  சிறுவர்களுக்கு திண்பண்டங்களை அனுப்பி வைத்துள்ளனர்.


தொடர்ந்து, தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக ஒரு குழு ஒன்றை அமைத்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


மேலும் வாசிக்க: Flu in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்; காரணம் என்ன? மருந்துகள், தடுப்பது எப்படி?