தற்போது ஆசிரியரின் பணி பணப் பரிவர்த்தனை சார்ந்ததாக மாறிவிட்டது. அப்போதெல்லாம் கால்களைப் பிடித்துவிட்டு கல்வி கற்றேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் 'எண்ணித் துணிக' என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் ஆளுநர் மாளிகையில் நேற்று (செப்டம்பர் 9) மாலை, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆளுநர் நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:
குருகுல அமைப்பு
''இப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவு பரிவர்த்தனை ரீதியில் மாறிவிட்டது. கடந்த காலத்தில் குருக்கள் (ஆசிரியர்கள்) நடத்தி வந்த குருகுல அமைப்பு இப்போது இல்லை.
அப்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் ஒரு நாளைக்கு 8 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்குச் செல்வேன். என்னுடைய குரு குளிப்பதற்காக, கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் கொடுப்பேன். அவர் உறங்கும்போது குருவின் காலைப் பிடித்துவிடுவேன். பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இத்தகைய மரபுதான் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் இன்று சிந்தித்துக் கூடப் பார்க்க முடியுமா?
கடந்த காலத்தில் குருக்கள் செய்த பணியினை, ஆசிரியர் என்னும் சொல் தற்போது முழுமையாகக் கடத்தவில்லை. என்னுடைய கிராமத்தில் குரு சொல்வதை எல்லோரும் எந்தக் கேள்வியும் இல்லாமல் கேட்பார்கள். இது எந்த விதமான சட்டப்பேரவை அதிகாரத்தாலும் வரவில்லை. மரபுசார் அதிகாரத்தால் ஏற்பட்டது. ஆனால் தற்போது ஆசிரியப் பணி, ஊதியம் பெறும் ஒரு சேவையாகப் பார்க்கப்படுகிறது.
உடல் ரீதியான தண்டனை
நான் உடல் ரீதியான் தண்டனை எதையும் பரிந்துரைக்கவில்லை. எனினும் என்னுடைய ஆசிரியர்கள் என்னைப் பல முறை அடித்திருக்கின்றனர். என்னுடைய வளர்ச்சிக்காக, நலனுக்காகத்தான் அந்த தண்டனை என்பதை நான் புரிந்துகொண்ட பிறகு, என்னுடைய பெற்றோர்களிடம் அதைப் பற்றிச் சொன்னதுகூட இல்லை.
கடந்த காலத்தில், ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்க மாட்டார்கள் என்று பெற்றோர்களுக்குத் தெரிந்து இருந்தது. ஆசிரியர்கள் ஒருவேளை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை அளித்தாலும்கூட, ஆசிரியர்களின் எண்ணம் நன்றாக இருந்தது என்பதைப் பெற்றோர்கள் அறிந்து இருந்தனர். ஆனால் இப்போது ஓர் ஆசிரியர் ஒரு மாணவரைத் திட்டினால், அதைப் பெற்றோர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
'பாரதத்தை' பிரதிபலிக்கவில்லை
அப்போது இருந்த நம்பிக்கை இப்போது அழிந்துவிட்டது. அதற்கு value system சீர்குலைந்ததே காரணம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுதந்திரங்கள், கடமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவை 'பாரதத்தை' பிரதிபலிக்கவில்லை.
அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை இந்திய அறிவுசார் அமைப்பை வலியுறுத்தி உள்ளது. அறிவுசார் அமைப்பு என்பது வெறும் பழங்கால அறிவு மட்டுமல்ல. மதிப்புசார் அமைப்பையும் கொண்டது. இந்த மதிப்புகள் வருங்காலத்தில் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.