ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்த்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது.
போராட்டத்துக்கு வருமாறு சங்கங்கள் வலியுறுத்தக் கூடாது
அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டத்தை அறிவித்தது. தொடர்ந்து ஆசிரியர்களைப் போராட்டத்துக்கு வருமாறு சங்கங்கள் வலியுறுத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்த்து பரிசீலிப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசிரியர் சங்கங்களின் உணர்வை மதிக்கிறோம்
’’ஆசிரியர் சங்கங்களின் உணர்வை மதிக்கிறோம். ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் ஈடுபடுவோரை அழைத்துப் பேசுவோம். சமாதானப்படுத்துவோம். இந்த முறையும் 31 வகையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் 12 வகையான கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவோம் என்று எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துவிட்டோம்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்போம்
தொடர்ந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் முன்னெடுத்து உள்ளது. அதில், அவர்கள் வைக்கும் கோரிக்கைகளைப் பார்த்து பரிசீலிப்போம். செய்யாமல் ஓடும் கூட்டம் நாங்கள் கிடையாது.
ஆசிரியர்களை அழைத்துப் பேசி, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதைச் செய்வோம். எவை எல்லாம் கால தாமதம் ஆகுமோ, அதை வலியுறுத்திக் கூறிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Teachers Protest: டிட்டோஜாக் ஆசிரியர்கள் போராட்டம்; பள்ளிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!