Teachers Strike: அறவழியில் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையா? மக்கள் போராட்டமாக மாற்றி விடாதீர்கள்- சீமான் எச்சரிக்கை

அற வழியில் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் மீது கொடும் அடக்குமுறைகளை ஏவுவதா? - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அற வழியில் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் மீது கொடும் அடக்குமுறைகளை ஏவுவதா? - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''சமவேலைக்கு, சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் என மூன்று பிரிவாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஒரு வார காலமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக வளாகத்தில் இரவும் பகலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமைதியான முறையில் போராட்டம்

வளமான நாளைய தலைமுறையை உருவாக்கும் அறிவுக் கருவூலங்களான ஆசிரியர்கள், தங்களது உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப்போராடிவரும் இழிநிலையை தாங்கமாட்டாது, போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, அவர்களது நியாயமான கோரிக்கைகள் வெல்ல, நாம் தமிழர் கட்சி இறுதிவரை தோளோடு தோளாகத் துணை நிற்போம் என உறுதியளித்து வந்தேன். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் உடல்நலனைக் கருத்திற்கொண்டு, உடனடிப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் இப்போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்து ஆசிரியப் பெருமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் நோக்கில், அவர்களின் மீது காவல் துறையினர் மூலம் கடும் அடக்குமுறைகளை ஏவியுள்ள திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த அதிமுக ஆட்சியில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியப் பெருமக்கள் போராடியபோது இதேபோன்ற அதிமுக அரசின் அடக்குமுறைகளைக் கடுமையாக கண்டித்ததோடு மட்டுமின்றி, திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்து, தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதிகளாக வெளியிடப்பட்டது. 

இதன்மூலம், ஆசிரியப் பெருமக்களின் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன்மூலம் பெருவாரியான வாக்குகளை அறுவடை செய்து, ஆட்சி கட்டிலில் ஏறி அமர்ந்ததும் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக அரசு அவர்களை வஞ்சித்து வருகிறது.

கொடுங்கோல் போக்கு

இதனால் கொதிப்படைந்துள்ள ஆசிரியப் பெருமக்கள் இறுதி வாய்ப்பாக, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய கொடும் சூழலினை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், துறை சார் அரசு அதிகாரிகளும் நேர்மறையாக எதிர்கொண்டு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு எட்டுவதை விடுத்து காவல்துறையினர் மூலம் கொடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது மக்களாட்சி முறைமைக்கு எதிரான கொடுங்கோல் போக்காகும்.

எனவே, காவல் துறையினரின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்த திமுக அரசு முன்வராவிட்டால், போராட்டக் களத்திற்கு மீண்டும் நேரில் சென்று, ஆசிரியப் பெருமக்களுடன் அமர்ந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக மாற்றவேண்டிய சூழலுக்கு என்னை உள்ளாக்கவேண்டாம் என தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola