Asia Games 2023: சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதாவது அக்டோபர் மாதம் 4ஆம் தேதி இந்திய ஆண்கள் அணி மற்றும் தென் கொரியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. 


இந்த ஹாக்கி போட்டி அரையிறுதிப் போட்டி என்பதால்  போட்டி தொடங்கியது முதல் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தது.   இந்த போட்டி பாதி நேரம் முடிந்ததும் இந்தியா 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பின்னர் மூன்றாவது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது பாதியில் தென் கொரியா அணி மற்றொரு கோலை அடிக்க, மூன்றாவது பாதி ஆட்டம் முடியும்போது 4-3 என்ற கணக்கில் இந்தியாவே முன்னிலை வகித்தது. 


இந்த போட்டியின் நான்காவது பாதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் செல்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. உட்சக்கட்ட பரபரப்பில் சென்ற இந்த போட்டியின் நான்காவது பாதியில், இந்திய அணி மேற்கொண்டு ஒரு கோல் அடிக்க இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்தியா ஹாக்கி ஆண்கள் அணி மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.