போட்டித் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தால் ஆசிரியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்னர், தேர்தல் வாக்குறுதிகளாக, டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது ரத்து செய்யப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. எனினும் இந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேற்குறிப்பிட்டதேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இதில் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தி வந்தனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆசிரியர்கள் கைது
எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்தது. அமைச்சர் அன்பில் மகேஸின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், தேவைப்படும்போது அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆதரவுடன் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர், ஆலோசனைக்குப் பிறகு அறிவித்துள்ளனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.