புகைப்பழக்கம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. புகைப்பதால் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய் உள்ளிட்டவை ஏற்படுகிறது. காசநோய், சில வகை கண் நோயுக்கு காரணமாக அமைவது மட்டும் இன்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தில் சிக்கல்கள் உருவாவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.


புகைப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகள்:


உலகம் முழுவதும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் 30 சதவிகிதம் புகைப்பதால்தான் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. நுரையீரல் புற்றுநோய் உயிரிழப்புகளில் 80 சதவிகிதம் புகைப்பழக்கத்தால் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கொடிய புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


அந்த வகையில், நியூசிலாந்தில் கடந்தாண்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த யாருக்கும் சிகரெட்டுகளை விற்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் நாட்டிலும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சிகரெட் பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சிகரெட் பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், அடுத்த தலைமுறை இளைஞர்கள் அனைவருக்கும் சிகரெட் கிடைக்காத சூழல் உருவாக உள்ளது. 


பிரிட்டனில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறதா?


ஆனால், இதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக, நாடாளுமன்றத்தில் சுதந்திரமான வாக்களிப்பு முறை நடத்தப்பட உள்ளது. அதாவது, கட்சி கொறடா உத்தரவை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மனசாட்சியின் படி வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.


மான்செஸ்டர் நகரத்தில் நேற்று நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் பேசிய அவர், "சிகரெட் பிடிப்பதற்கான வயது ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும். இதனால், 14 வயது சிறுவனுக்கு சிகரெட் சட்டப்பூர்வமாக விற்கப்படமாட்டாது. சுதந்திரமான வாக்களிப்பு முறை கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே, அரசியல்வாதிகள் தங்கள் முடிவை மனசாட்சியின்படி எடுக்க வேண்டும்.


பிரிட்டன் தேசிய சுகாதார அமைப்பின் மீது புகைப்பழக்கம் கடும் அழுத்தத்தை விளைவிக்கிறது. இதற்காக, ஆண்டுக்கு 17 பில்லியன் யூரோக்கள் செலவிடப்படுகிறது. சட்டப்பூர்வ வயதை உயர்த்துவது, 2030ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கம் இல்லாத சமூகம் என்ற இலக்கை அடைய உதவும்" என்றார்.


பிரிட்டனில் அதிகப்படியான சிகரெட்டுகளை விற்கும் இம்பீரியல் பிராண்டு நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவிகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனுக்கு வெளியே அதிகப்படியான சிகரெட்டுகளை விற்கும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபாக்கோ நிறுவனத்தின் பங்குகள் 1.9 சதவிகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனில் புகைப்பிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது தற்போது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் அரசு எடுத்துள்ள அதிரடி முடிவால் புகைப்பழக்கத்திற்கு மாற்றாக நிகோடின் உள்ளிட்டவற்றை கொண்டு வர புகையிலை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.