விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதனுள் வரும் வீடியோவை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை திருப்பித்தரப்படும் எனக்கூறியுள்ளார்.


ராதாகிருஷ்ணன், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.150-ஐ தன்னுடைய வங்கி கணக்கில் பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய நபர், பகுதிநேர வேலையாக சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன், 6 தவணைகளாக தனது வங்கி கணக்கு மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 214ஐ அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.


இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண், தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்த போது டெலிகிராம் ஐடி மூலம் அவரை தொடர்பு கொண்ட நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அந்த லிங்கினுள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய அந்த பெண், தனது வங்கி கணக்கில் இருந்து 10 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் அப்பெண்ணுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


பொதுமக்களே இணைய வழியில் வருகின்ற எந்த ஒரு முதலீடு, வேலை வாய்ப்பு, அதிக லாபம், அதிக வருமானம்,  போன்ற எந்த அழைப்பையும் ஏற்க வேண்டாம்.


வங்கி மேலாளர் பேசுகிறேன் அல்லது வேறு எந்த காரணம் சொல்லி ஓடிபி என்னை கேட்டாலும் (OTP) சொல்ல வேண்டாம்.


புதிய எண்ணில் இருந்து வருகின்ற வீடியோ காலில் பேச வேண்டாம்.


ஓஎல்எக்ஸ் (OLX) இல் பொருள் வருவதற்கு முன்பு பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.


பழைய பொருட்களை வாங்கி விற்கும் வலைதளங்களில், (APP) அவர்கள் கூறுவதை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.


உடனடியாக லோன் தருகிறேன் என்று சொல்வதை நம்பி எந்த loneapp லும் கடன் வாங்க வேண்டாம்.


கிரிப்டோ கரன்சி பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் கிடைக்கும் என்று சொன்னால் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.


இணைய வழியில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் தருகிறோம் என்று சொல்வதை  நம்பி  பேராசை கொண்டு முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என இணை வழி காவல்துறை கூறியுள்ளது.