தலைசிறந்த ஆசிரியரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகின்றன. 


ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஏன் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது? 


மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 


யார் இந்த ராதாகிருஷ்ணன்? | Who is Sarvepalli Radhakrishnan?


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி அப்போதைய பிரிக்கப்படாத திருத்தணி நகரத்தில் பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் ராதாகிருஷ்ணன். தனது இளமைக் காலத்தை திருத்தணியிலும் திருப்பதியிலும் கழித்தார். 


தன்னுடைய ஆரம்பக் கல்வியை திருவள்ளூரில் உள்ள கௌடி பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைத் திருப்பதியில் உள்ள லூர்தன் மிஷன் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியிலும் முடித்தார். பின்னர், பாரம்பரியம் வாய்ந்த சென்னைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தார்.


சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி பேராசிரிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1918ம் ஆண்டு மைசூர் பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, 1921ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைகழகத்திலும் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டார்.


வாரணாசி போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலம் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். தத்துவவியலில் நிபுணத்துவம் பெற்ற ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்ற புத்தகம் 1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றது.


1952ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவரது கல்விச் சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு 1954ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவித்தது. பின்னர், நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.




ஆசிரியர் தினம் பிறந்தது எப்படி?


ராதாகிருஷ்ணன் 1962ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அந்த ஆண்டு அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது நண்பர்கள் மற்றும் அவரிடம் பயின்ற மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.


அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், தனது பிறந்தநாளை தனித்தனியாகக் கொண்டாடுவதற்கு பதிலாக, செப்டம்பர் 5-ம் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்  மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாகக் கடைப்பிடித்தால் அது தனது பாக்கியமாகவும், பெருமையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, அந்த ஆண்டு முதல் நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.