ஏப்.15-ம் தேதிக்குள் டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழக டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர்.இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத மாணவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.


நாளை சிஇஇடிஏ தேர்வு


கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். எனப்படும்  முறையே முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 


இந்த ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. சிஇஇடிஏ தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது. 


எம்சிஏ தேர்வுக்கு 9,820 தேர்வர்களும் எம்பிஏ தேர்வுக்கு 24,468 தேர்வர்களும் விண்ணப்பித்து இருந்தனர். சிஇஇடிஏ தேர்வுக்கு 4,961 பேர் விண்ணப்பித்துள்ளனர். 


2022 டான்செட் தேர்வு


கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.


ஏப்ரலில் தேர்வு முடிவுகள் 


இந்த டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு ஒன்று நடைபெறும். அந்த கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மார்ச் மாதம் நுழைவுத் தேர்வு நடைபெறும். அதன்பின்னர் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே ஏப்.15-ம் தேதிக்குள் டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழக டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 


கூடுதல் விவரங்களுக்கு


தொலைபேசி எண்கள்: 044 – 22358314 / 22358289 


இ- மெயில் முகவரி: tanceeta@gmail.com