முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம் ‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தெலங்கானா அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்கும்‌ முறையையும்‌, அதை பள்ளிகளுக்குக்‌ கொண்டு சேர்க்கும்‌ முறையையும்‌ ஆய்வு செய்த குழுவினர், பள்ளிக்‌ குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவதைப்‌ பார்வையிட்டனர்‌.


தமிழ்நாட்டில்‌ தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்,‌ அண்மையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ விரிவுபடுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 31,008 பள்ளிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ இத்திட்டத்தால்‌ 18 லட்சம்‌ மாணவர்கள்‌ பயன்பெறுகின்றனர்‌.


தெலங்கானா அதிகாரிகள் வருகை


இத்திட்டம்‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்திருக்கிறது. காலை உணவுத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌ முறை குறித்து அறிந்துகொள்வதற்காக அண்டை மாநிலமான தெலங்கானாவில்‌ இருந்து அரசாங்க அதிகாரிகள்‌ வருகை தந்தனர்‌. இக்குழு காலை உணவுத்‌ திட்டத்திற்கான மையச்‌ சமையலறைகளில்‌ ஒன்றாக அமைந்துள்ள ஜி.சி.சி. பழைய பள்ளிக்‌ கட்டடம்‌, எஸ்‌.என்‌.செட்டி தெரு, ராயபுரம்‌, சென்னை -13 என்கிற முகவரிக்கு காலை 7 மணிக்குச்‌ சென்றனர். அங்கு உணவு தயாரிக்கும்‌ முறையையும்‌, அதை பள்ளிகளுக்குக்‌ கொண்டு சேர்க்கும்‌ முறையையும்‌ பார்வையிட்டனர்‌.


அதன்‌ பின்னர்‌, காலை 8 மணிக்கு ராயபுரம்‌ ஆர்த்தான்‌ சாலையில்‌ உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப்‌ பள்ளிக்குச்‌ சென்று, பள்ளிக்‌ குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவதைப்‌ பார்வையிட்டனர்‌.


தெலங்கானா குழுவில் இடம்பெற்றவர்கள் யார்?


* தெலங்கானா முதலமைச்சரின்‌ செயலாளர் ‌ஸ்மிதா சபர்வால்‌,
* பழங்குடியினர்‌ நலத்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌ டாக்டர்‌. கிறிஸ்டனா சொங்து 
* கல்வித்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌ கருணா வக்காட்டி, 
* தெலங்கானா முதலமைச்சரின்‌ சிறப்புப்‌ பணி அலுவலர்‌ ப்ரியங்கா வர்கீஸ்
* பெண்கள்‌, குழந்தைகள்‌, மாற்றுத்‌ துறனாளிகள்‌ மற்றும்‌ மூத்த குடிமக்கள்‌ துறை அரசு சிறப்புச்‌ செயலாளர்‌ பாரதி ஹொல்லிக்கேரி,
ஆகியோர்‌ தெலங்கானா மாறில்‌ அரசு அதிகாரிகள்‌ குழுவில்‌ இடம்பெற்றனர்‌.


இதுகுறித்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் எவ்வாறு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்ய உள்ளனர்.


இவை குறித்த விவரங்கள் அனைத்தையும் தெலங்கானா முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். தெலங்கானா போலவே, வேறு ஏதேனும் மாநிலங்கள் தமிழகம் வந்து காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்'' என்று இளம்பகவத் தெரிவித்தார்.


முன்னதாக பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, 2022 முதல் தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.