தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் மதிப்பெண் பட்டியலை எதிர்பார்த்து உள்ளனர்.


கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் பட்டியலை ஆகஸ்டு 23-ம் தேதி http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இன்று முதல் ஆகஸ்டு 31-ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.



முன்னதாக, கடந்த ஜூலை 19-ம் தேதி 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது (50:20:30). 12ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது.   மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முன்னதாக அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது. வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தொற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது.  இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. 


School Re-open Guidelines: பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு