தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி முடிகிறது. நாளை முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் 2022- 23ஆம் கல்வி ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. 10, 11, 12 ஆஅம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இன்றுடன் முடியும் தொடக்கப் பள்ளித் தேர்வுகள்
இந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளித் தேர்வுகளும் இன்றுடன் முடிகின்றன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11-ம் தேதி தேர்வு தொடங்கி, இன்றுடன் (ஏப்ரல் 28ஆம் தேதி) நிறைவு பெற்றுள்ளது.
இதற்கிடையே நடப்புக் கல்வியாண்டில் அனைத்துபள்ளிகளுக்குமான வேலை நாள் இன்றுடன் (ஏப்ரல் 28) நிறைவு பெற்றுள்ளது. இதை அடுத்து மாணவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 29ஆம் தேதி) கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
’’வெயில் அதிகம் இருந்தால் ஜூன் மாதத்தில் தாமதமாக பள்ளிகளைத் திறப்பது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விடுமுறை நாட்களில் சிறுவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். விடுமுறை நாட்களில் பெற்றோர்கள், குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’’ என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு பள்ளி இறுதி வேலைநாளாக ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.