6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதலமைச்சரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் அது பெரும் ஆபத்தாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 


 






இந்த நிலையில், இந்த ஆலோசனை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அல்லது 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றிய அறிக்கையை முதலமைச்சரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளோம்” என்று கூறினார்.


மேலும்,  “அதிகபட்சமாக குமரி மாவட்டத்தில் 87 சதவீதம் மாணவர்களும், குறைந்தபட்சமாக கோவை மாவட்டத்தில் 67 சதவீதம் மாணவர்களும் பள்ளிக்கு வந்துள்ளனர். கோவை மாவட்டத்தில்தான் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். 


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களில் 7 பேர் குழந்தைகள் என்றும், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் பாதிக்கப்படும் விகிதம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்த நிபுணர்கள், இதனை கண்டு அச்சப்பட வேண்டாம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த தகவல் கிடைத்துள்ளது.




மத்திய அரசின் தரப்பில் இவ்வாறு ஒரு தகவல் வெளியான நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாளை முதல்வருக்கு சமர்பிக்கப்படும் அறிக்கையில், பள்ளி திறப்பதற்கான கருத்துகளே அதிகம் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க முதலமைச்சர் அனுமதி அளிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பள்ளி திறப்புக்கான அனுமதியை கொடுத்தால், அது பெரும் ஆபத்தில் முடியும் என்று தோன்றுகிறது. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி இந்தியாவில் இன்னும் வெளியாகத நிலையில், அவர்களுக்காக பள்ளி திறப்பு என்பது ரிஸ்க் என்றே கூறலாம். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட போது, சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையெல்லாம், கவனத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து தீவிர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.



இதனிடையே, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 17 முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலையே மாணவர்கள் பெறலாம் என்றும், மதிப்பெண் சான்றிதழ் பெற பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Engineering qualities of Ram | கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ராமனின் இஞ்சினியரிங் திறன்கள்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்..!


JNU University: குர்ஆன் பயங்கரவாதத்தை போதிக்கிறது” ஜேஎன்யூ., புதிய பாடத்தில் சர்ச்சை!