ராமனின் பொறியியல் நுட்பங்களை வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், மத்தியப்பிரதேசத்தில் புதிய கல்விக்கொள்கை 2020-ஆம் ஆண்டின்படி கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் மகாபாரதம், ராம்சாரித்மனாஸ், யோகா மற்றும் தியானம் போன்றவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என மத்தியப் பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.


கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தக் கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் செயல்படத்தொடங்கும் என அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 2 லட்சம் வரை பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இந்த மாணவர்களுக்கு  மனித வாழ்க்கையின் மதிப்பு மற்றும் மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கேற்ற பாடத்திட்டங்கள், கடவுள் ராமனின் பொறியியல் நுட்பங்களை தெரிந்துக்கொள்ளும் விதமாக  மகாபாரதம், ராமசரித்திரம், யோகா, தியானம் பற்றிய பாடத்திட்டங்கள் புதிய கல்விக்கொள்கையின் படி இந்தாண்டு புதிதாக சேர்க்கப்படும் என மத்தியப்பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.




மேலும் “ராமசரித்மனாஸ் தத்துவம், உருது உள்ளிட்ட 24 பாடங்கள் விருப்ப பாடமாகவும் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.  இதில் கடவுள் ராமர் சீதையை மீட்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு செல்ல  ராமர் சேது பாலத்தை கட்டியதாக புராணங்கள் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் சேது பாலத்தை எந்த அளவிற்கு பொறியியல் நுட்பங்களைப்பயன்படுத்தி மேற்கொண்டார் என்பதை வரும் தலைமுறையினரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் ராமசரித்மனாஸ் தத்துவம் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், புராணங்கள், இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் ஆன்மீகம் மற்றும் மதம் போன்றத் தலைப்புகளில் பாடத்திட்டங்கள் அமையப்பெறவுள்ளது.  இதன் மூலம் மாணவர்களுக்கு  மனித வாழ்க்கையின் மதிப்பு , நல்லொழுக்கம் மற்றும் மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும்” என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்




மத்தியப்பிரதேசத்தில் புராணங்கள் தொடர்பாக பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது இது முதல் முறைல்ல. கடந்த 2011-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை தொடர்பான பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கிளம்பிய எதிர்ப்பால் அந்த திட்டம் திரும்பப்பெறப்பட்டது. அதேபோல் தற்போது புதிய கல்விக்கொள்கை திட்டம் 2020-ஆம் ஆண்டின் படி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த பாடத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இதில், “மகாபாரதம், கீதாச்சாரம் மற்றும் ராம்சாரித்மனாஸ் கற்பிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மாணவர்களுக்கிடையே வகுப்புவாத நல்லிணக்கத்தை வளர்க்க மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பைபிள், குர்ஆன் மற்றும் குரு கிரந்த் சாஹிப் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிசி சர்மா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.