இந்தியாவின் புகழ்பெற்ற அரசு பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்காக புதிய கோர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. COUNTER TERRORISM என்ற பெயரிலான பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான இந்த கோர்சின் பாடம் ஒன்றில் இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்டுகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
”Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation among Major Powers” என்ற இந்த கோர்சை, எம்.எஸ். சர்வதேச தொடர்புகள் பட்டம் படிக்கும் மாணவர்களும் கற்கலாம். மத பயங்கரவாதத்தின் ஒரே வடிவம் ஜிஹாத் என்றும், சீனா மற்றும் சோவியத் ரஷியாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிச அரசுகளே, இஸ்லாமிய நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வருவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உலகின் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் மட்டுமே பயங்கரவாதிகளாக பாடத்தில் குறிப்பிடுவது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்பாடு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கல்வித்திட்டக் குழு உறுப்பினர் தெரிவிக்கையில், “Counter Terrorism என்ற இந்த கோர்ஸை அறிமுக செய்யும் முடிவு கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி எவ்வித விவாதங்களும் இன்றி தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் விவாதங்கள் இன்றி குழுவின் கருத்தை கேட்காமல் இதை கொண்டு வந்துள்ளார். இதன் இறுதிக்கட்ட ஒப்புதல் வெறும் கண் துடைப்பு நாடகம் தான்.” என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த கோர்ஸின் 3-வது பிரிவில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் பயங்கரவாதத்தையும், கொலைகளையும், தற்கொலைகளையும், வன்முறையையும் மதத்தின் பெயரால் புனிதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ”இஸ்லாமிய மத போதகர்கள், இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் சமூக வலைதளங்களில் பயங்கரவாத கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்புகின்றனர்.” என்றும் அந்த பாடத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனடா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா குறித்த பாடத்திட்டங்களை வகுக்கும் அமைப்பின் தலைவர் அர்விந்த் குமார், துணை பேராசிரியர் அன்ஷு ஜோசியுடன் இணைந்து இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்து உள்ளார். இதுகுறித்து விளக்கமளித்து உள்ள அவர், “இந்தியாவின் பார்வையில் இந்த பாடத்திட்டங்களை உருவாக்கி உள்ளோம். இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவுக்கு எப்போதும் கேடு விளைவிக்கிறது.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
அதே சமயம் இந்தியாவில் இந்துத்துவ வலதுசாரி குழுக்கள் பசுவுக்காக நடத்தும் படுகொலைகள் மாலேகானில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், குஜராத் படுகொலைகள், பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு எதிரான கும்பல் படுகொலைகள், பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷ், தபோல்கர், கல்புர்கி போன்றோரை கொன்ற பயங்கரவாத குழுக்கள் குறித்து எந்த கருத்தும் அந்த பாடத்தில் இடம்பெறவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு படிப்புகளில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற பெயரில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டது. இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து டெல்லி அரசின் சிறுபாண்மையினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அந்த பாடத்தை திரும்பப்பெற்றது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பல்வேறு எழுச்சி போராட்டங்களுக்கு புகழ்பெற்றது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கொடூர தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரி, முற்போக்கு மாணவர்கள் இயக்கங்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மத்தியில் வலதுசாரி சிந்தனையையும், இடதுசாரிகள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வையும் ஏற்படுத்தவே இத்தகைய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக அங்குள்ள மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி இருக்கின்றன.