கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்ட பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி, ஏற்கனவே பள்ளிகள் திறப்பு நாளை மறுநாளுக்கு (07.06.2023)ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அதிகபட்சம் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் தாக்கம் குறையாததால், இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இருப்பினும், பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை பள்ளிக்கல்வி துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. முதலமைச்சர், துறைசார் அமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கு பின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்:
மாணவர்களுக்கு 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தொடக்கப் பள்ளித் தேர்வுகள் (ஏப்ரல் 28- ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11-ம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது.
மாணவர்களுக்கு ஏப்ரல்- 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 5-ம் தேதியும் (இன்று) பள்ளிகள் தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரென்ஹீட் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், பலரும் மாணவர்களின் நலன் கருதி அரசு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையெடுத்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றி கடந்த மே 26- ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில், மாணவர்களுக்கு நாளை மறுநாள் (07.06.2023) பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. இருப்பினும், கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி முக்கியம்; அதைவிட மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்றும், வெப்பம் அதிகரித்து வருவதால் பள்ளி திறப்பு தேதியை மாற்றி வைக்க அரசு பரிசீலிக்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்திய பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வாசிக்க..