கோடை விடுமுறைக்குப் பிறகு மழலையர் வகுப்புகள் முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் நாளை (ஜூன் 14ஆம் தேதி) அன்று திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் பதற்றத்தையும் டென்ஷனையும் தவிர்க்க பெற்றோர்கள் இதையெல்லாம் பின்பற்றலாம். 


தினசரி வழக்கத்தில் இருந்து மாறி, 1 மாதத்துக்கும் மேலாக நினைத்த நேரத்துக்குத் தூங்கி, எழுந்து, சாப்பிட்ட குழந்தைகளை மீண்டும் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியது முக்கியம். சிரமமாக இருந்தாலும் அதைச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.


அதேபோல காலை நேரப் பள்ளிகள் திறப்பு பரபரப்பில் எதையும் மறக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?


சீருடை


குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால், ஆண்டுதோறும் பெரும்பாலும் சீருடைகளைப் புதிதாகத் தைக்க வேண்டி வரும். சில நேரங்களில் மட்டும் கடந்த ஆண்டு சீருடையே போதுமானதாக இருக்கும். புதிய சீருடை தேவைப்படுபவர்கள் சரியான அளவைத் தையல்காரர்களிடம் கொடுத்து, தைத்து வைக்க வேண்டியது அவசியம்.


தைக்கப்பட்டு, தயாராக வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் உடைகளைப் போட்டுப் பார்த்தும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். பள்ளி திறக்கும் நாளுக்கு முன்னதாக, நேரம் இருக்கும்போதே  அயர்ன் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். இவற்றுடன் கைக்குட்டைகள், முகக் கவசங்களையும் துவைத்து, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். 


காலணிகள்


குழந்தைகளின் ஷூ, சாக்ஸ் உள்ளிட்டவை அளவு சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்க்க வேண்டும். அளவு சரியாக இருக்கும்பட்சத்தில் அதையே பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் ஷூக்களுக்கு பாலீஷ் போட்டு வைக்க வேண்டியது முக்கியம். அதற்கு முன்னதாக நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்ததால், ஷூக்களுக்கு உள்ளே ஏதேனும் பூச்சி, ஜந்துகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.




புத்தக, உணவுப் பைகள்


இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் புதிய வகுப்புகளுக்கு புதிய புத்தகப் பைகள், உணவுப் பைகளை பெற்றோரே வாங்கிக் கொடுப்பதைக் காண முடிகிறது. பொருட்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே அவற்றைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிது புதிதாக வாங்குவது குழந்தைகளின் மனநிலையில் உருவாக்கும் மாற்றத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். 


தேவைப்படும்போது புதிய பைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் தூக்கிச் செல்லும்போது உறுத்தாமல் இருக்க, அவற்றில் பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல நோட்டுகள், புத்தகங்களுக்கு முன்கூட்டியே அட்டை போட்டு வைத்துவிடுவது நல்லது. 


உணவு டப்பா


குழந்தைகள் எடுத்துச்செல்லும் உணவு, சிற்றுண்டி டப்பாக்கள் எவர்சில்வரில் இருப்பது நல்லது. பிளாஸ்டிக் பாக்ஸ்களில் சூடாக உணவு கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்கலாம். 


உணவு அட்டவணை


குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கான மதிய உணவு, சிற்றுண்டி, பழங்கள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே யோசித்து, திட்டமிட்டுக் கொள்ளலாம். அதற்குத் தேவையான காய்கறி, மளிகை, சமையல் பொருட்களையும் முன்பாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் காலை நேரத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். 




எழுதுபொருட்கள்


இப்போதெல்லாம் பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களுக்கு பென்சில், பேனா, அழிப்பான் உள்ளிட்ட எழுதுபொருட்களை வழங்க ஆரம்பித்துள்ளன. அவ்வாறு கொடுக்கப்படாத பட்சத்தில், அவற்றைப் பெற்றோர்கள் வாங்கிவைக்க வேண்டியது முக்கியம். 


உணவு, உறக்க ஒழுங்கு


பெற்றோர்கள் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது இதுதான். ஒரு மாதத்துக்கும் மேலாக குழந்தைகள் தாமதமாகத் தூங்கச் சென்று தாமதமாக எழுந்து, காலை உணவை மதியத்தில் உண்டிருப்பார்கள். மதிய உணவு மாலையிலும் இரவு உணவு இன்னும் தாமதாகவும் உள்ளே சென்றிருக்கும். பள்ளி விரைவில் திறக்கப்பட இருப்பதால், சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் சாப்பிடுவதை இப்போதில் இருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டியது அவசியம்.  


பாட அடிப்படைகளை மறுவாசிப்பு செய்வது


குழந்தைகள் விளையாட்டு, தொலைக்காட்சி, யூடியூப், சமூக வலைதளங்கள், கோடைக்கால வகுப்புகள் என்று பொழுதைக் கழித்திருப்பர். இதனால் திடீரென பள்ளிக்குச் சென்று புத்தகங்களை முழு நேரமும் படிப்பதில் சிரமம் ஏற்படலாம். இதனால் குழந்தைகள் முந்தைய வகுப்புகளில் படித்த பாடங்களின் அடிப்படை கருத்துருக்களை, மீண்டும் மறு வாசிப்பு செய்ய வைக்கலாம். 


இவை அனைத்தையும் பின்பற்றினால், பெற்றோர்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.