பள்ளிகள் திறக்கப்படும் தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


முன்னதாக மாநிலம் முழுவதும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.6-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல 4 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கியது.


அதே நேரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 23 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.


மே மாதம் வெளியான தேர்வு முடிவுகள் 


பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் முறையே மே 6ஆம் தேதி மற்றும் மே 10ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடர்ந்து 2024- 25ஆம் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு பற்றி மே 22ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமர குருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்குப் பிறகு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். 


வெயில், மழை.. சட்டென மாறும் வானிலை


இந்த நிலையில் மே மாதம் மழை காரணமாக வெயில் குறைந்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் வெயில் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த நாளான நேற்று (மே 28), சென்னையில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதைத்தொடர்ந்து இன்றும் சென்னையில் 107 டிகிரியில் வெயில் கொடுமை படுத்தியது. 


அதேபோல தென்மேற்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெயில், மழை என மாறுபட்ட வானிலை நிலவி வருகிறது.


ஜூன் 10ஆம் தேதி திறக்கக் கோரிக்கை


இதனாலும் ஜூன் 6ஆம் தேதியான வியாழக் கிழமையும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமையும் என இரண்டு நாட்கள் பள்ளிக்குப் பிறகு விடுமுறை அறிவித்து ஒரே மனதாக ஜூன் 10ஆம் தேதி திங்கள் கிழமைக்குப் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.