1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி (1-9-2021) முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21:08.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய்த் தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள கோவிட்- 19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09 2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று பரவல் நம் மாநிலத்தில் இல்லாத நிலையை உருவாக்க உதவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
Tamil Nadu Unlock | நாளை மறுநாள் முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி