தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணை வேந்தராக ஆறுமுகமும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பதவியேற்றதில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பர்.
புதிய துணை வேந்தர் ஆறுமுகம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியிய துறை பேராசிரியராக ஆறுமுகம் பணியாற்றி வருகிறார். கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர். நிர்வாகப் பணிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
3 புத்தகங்களை எழுதி உள்ளார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் 19 கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியுளார். DAE-BRNS, SERC, SERB, TANSCHE, DRDO, DMRL-CARS, AICTE, DST-JSPS, DST-Poland, DST-DAAD, DST-Russia, Indo-France (CEFIPRA), ASEAN, DST-Swiss, UGC, CSIR, RUSA ஆகியவற்றின் நிதியுதவியின்கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பில் செயல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
தொலைதொடர்பு கல்வி மையத்தின் இயக்குநர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மத்திய பொறுப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
மூத்த விஞ்ஞானி விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு விஞ்ஞானி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
புதிய துணை வேந்தர் கலா
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கே.கலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வருகை பேராசிரியராகப் (visiting professor) பணியாற்றி வருகிறார்.
34 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்டவர். நிர்வாகப் பணிகளில் 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 2 புத்தகங்களை எழுதி உள்ளார். சர்வதேச அளவில் 4 கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியுளார். 20 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
திருச்சி பிராந்திர இணை இயக்குநர், நாமக்கல் NKR அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர், திருச்சி பாரதிதாசன் கல்லூரி குறைதீர் மையம் மற்றும் மாணவர் கலந்தாய்வு இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை கலா வகித்துள்ளார்.