ஓசியில் சிக்கன் ரைஸ் தராததால் குடிபோதையில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர்கள் வெளியான பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

சென்னை தாம்பரம், சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், அண்ணாநகர் மெயின் ரோட்டில் கிருதிஷ் செட்டிநாடு ஹோட்டல் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த ஜெயமணி (59), இவரது கடையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அஜித் மற்றும் கார்த்திக் இருவர் வந்து நான்கு சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளரும் சிக்கன் ரைஸ் பார்சல் கட்டி கொடுத்துள்ளார். பார்சலை வாங்கிக் கொண்டு பணத்தை பிறகு தருவதாக கூறி எடுத்து செல்ல முயன்ற போது, பணத்தை கொடுத்து விட்டு எடுத்து செல்லுமாறு கடையின் உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அஜித் மற்றும் கார்த்திக் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து விட்டு சென்று விட்டனர். 

 

சூடாக இருந்த எண்ணெய்யை

 

பின்னர் 11.15 மணிக்கு  உணவகத்திற்கு தனது நண்பர்கள் 4 பேரை உடன் அழைத்து கொண்டு 6 பேராக வந்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகனை ஆபாசமாக திட்டி கடாயில் கொதிக்க கொதிக்க சூடாக இருந்த எண்ணெய்யை எடுத்து அவர்கள் மீது ஊற்றி விட்டு அடுப்பு, பாத்திரங்களை எடுத்து சரமாரியாக தாக்கிவிட்டு, உணவகத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர். அதன் சிசிடிவி காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

 

5 பேர் கைது, ஒருவர் தலைமறைவு 

 

பின்னர் தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் தீக்காயமடைந்த ஜெயமணி(59), அவரது மகன் மணிகண்டன்(29), ஊழியர் நேபாளத்தை சேர்ந்த நேமராஜ்(29), ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாடம்பாக்கத்தை சேர்ந்த அஜித் (27), கார்த்திக் (எ) ஹரிஹரன் (35), பிரவின் (எ) ஜாகோ(20), சிவா (28), விக்கி (24), உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.  ஓசியில் சிக்கன் ரைஸ் தராததால் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.