மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக, மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள்


சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரி வருகிறது. 


இந்த நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.


முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்த வகையில் தேர்வு நடத்தப்படும் என்றும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு திறந்த புத்தகம் முறையில் தேர்வு (CBSE Open Book Exams) நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.


அது என்ன புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் முறை?


புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை பொதுவாக மேலை நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் இந்த முறை அமலில் உள்ளது. 


இந்த நிலையில், மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறைக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, பொதுத் தேர்வுகள் தவிர்த்த மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மாநிலத்துக்கெனத் தனி கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்து, பரிந்துரைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.