இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக நடைபெற்றது. மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான திரைப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், முக்கியப் புள்ளிகள், சர்வதேச தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


 




இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கொண்டாட்டத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பட்டம் கொண்டாட்டம், தடபுடலான விருந்து என ஜாம்நகரே விழாக்கோலம் பூண்டு காட்சி அளித்தது. சோசியல் மீடியா எங்கிலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் குறித்த தகவல்களும் புகைப்படங்களும் தான் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 


முகேஷ் அம்பானியின் வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அங்கு தவறாமல் அமிதாப் பச்சன் குடும்பம் கலந்து கொள்வார்கள். அந்த வகையில்  இந்தத் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டத்தில் கடைசி நாளில் பச்சன் குடும்பம் மொத்தமாக கலந்து கொண்டது. அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் மகன் ஆராத்யா தான். 


12 வயதாகும் ஆராத்யா இது வரையில் குட்டிப் பாப்பாவாக முகத்தின் பெரும்பாலான பகுதியை முடியை வைத்து மறைத்துக் கொள்ளும் படியான ஹேர்ஸ்டைலில் தான் எப்போதுமே தோன்றுவார். ஆனால் முதல் முறையாக மிகவும் வித்தியாசமான ஒரு ஹேர்ஸ்டைலில் அம்பானி வீட்டு விழாவில் கலந்து கொண்டார். ஆராத்யாவை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்து இருந்தனர். இது உண்மையிலேயே ஆராத்யா தானா? என அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து இருந்தார். பார்க்க அச்சு அசல் அவரின் அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றமளிக்கிறார் என்பது தான் அனைவரின் விமர்சனமாக இருந்தது. அம்மா அப்பா மகள் என மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். 


 



எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் மகள் ஆராத்யாவையும் உடன் அழைத்து செல்லும் பழக்கம் கொண்டவர் ஐஸ்வர்யா ராய். அம்மாவின் கையை எப்போதுமே இறுகப்பற்றி கொள்ளும் மகள் ஆராத்யா இந்த நிகழ்ச்சியில் தாத்தா அமிதாப் பச்சன் கையை பற்றிக் கொண்டு சென்றதை காண முடிந்தது. இந்நிலையில், அம்பானி வீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆராத்யாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.