கோவை தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டார்ட் அப் அகடமி சார்பில் தமிழகத்தின் சிறந்த சுய தொழில் நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறந்த சுயதொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் கோவையில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கோவையில் புதிய தொழில்முனைவோர் உருவாவது அதிகரித்து வருகின்றது. சுதந்திரம் கிடைத்தது முதலே உற்பத்தித் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடாகவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி என்றாலும் ஸ்டார்ட் அப் குறித்து சில விடயங்கள் சொல்ல விரும்புகின்றேன். பா.ஜ.கவும் மோடியும் தொழில் துறைக்கு என்ன செய்தார்கள் என்று கேட்கலாம். உற்பத்தி தொடர்பானவை எல்லாமே மத்தியில் இருந்து திட்டமிட்டதால் முன்பு லைசென்ஸ் கோட்டாராஜ் இருந்தது.உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதை போக மீதியை ஏற்றுமதி செய்யலாம். நிறைய உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்கு விடவில்லை. அளவோடு உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதி இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், பெரிய. தொழில்கள் இருந்தாலும் முன்னேற முடியவில்லை. இதை ஜனசங்க காலம் முதலே விமர்சித்து வந்திருக்கின்றோம்.
தற்போது நம் உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்களில் உற்பத்தியை அதிகரிக்க கொள்கை மாறுதல்களை செய்தது பிரதமர் மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டுநலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். மற்றபடி பொதுத்துறை இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார் துறை அனுமதிக்கப்பட்டுள்ளது. அணு, விண்வெளி ஆராய்ச்சியில் கூட தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர, தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்ன சின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. 2015ல் பிரதமர் புதிய தொழில் முனைவோருக்கான எளிமையான முறைகளை உருவாக்கியுள்ளார்.
தற்போது நாம் வெப் 3 யுகத்தில் இருக்கிறோம். இதற்கேற்ப ஸ்டார்ட்-அப்களில் புதியவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்.கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். இந்தியாவும், ஜெர்மனியும் ஸ்டார்ட் அப்பில் ஒன்றாக இருந்த நிலையில். தற்போது இந்திய தொழில்களை ஜெர்மனி உற்றுக்கவனிக்க துவங்கியுள்ளது. பின்டெக் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாட உள்ளோம். அதன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தின் போது கணபதி பாடலும், நிகழ்ச்சிக்கு பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டது. அதேசமயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.