மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க ‌ வேண்டுதல்‌ உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்‌ அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை‌ நடத்த உள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25 அன்று தமிழக முதல்வரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் இன்று கூறி உள்ளதாவது:


''தமிழகத்தில்‌ மேல்நிலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்களாகியும்‌ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எங்களுடைய ஊட்டு பதவியில்‌, கீழ் நிலையில்‌ பணியாற்றியவர்கள்‌ எங்களுக்கே ஆய்வு அலுவலராக உள்ளதால்‌ மிகுந்த மன உளைச்சலுடன்‌ பணியாற்றி வருகிறோம்‌. 


தமிழகத்தில்‌ வேறு எந்த துறையிலும்‌ இப்படிப்பட்ட நிலை இல்லை. இந்த முரண்பாடுகளைக்‌ களைய தமிழக முதல்வரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ கீழ்க்காணும்‌ 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்‌ வரும்‌ 25.02.2023 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல்‌ 5.00 மணி வரை உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ நடத்த மாநில பொதுக்குழுவில்‌ முடிவு செய்யப்பட்டுள்ளது.


* பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடடிக்கைகளை எடுத்து வரும்‌ தமிழக அரசு, 45 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வே இல்லாத மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கிட விதிகளில்‌ திருத்தம்‌ செய்யப்பட வேண்டும்‌.


* மாணவர்களின்‌ தரம்‌ மேம்பட, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்‌ கற்றல்‌ , கற்பித்தல்‌ பணிகளில்‌ மட்டும்‌ ஈடுபடுத்தப்பட வேண்டும்‌. EMIS, நலத்திட்டங்களை செயல்படுத்த தனி அலுவலர்‌ நியமிக்கப்பட வேண்டும்‌.


* ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கிடும்‌ வகையில்‌ ஆசிரியர்கள்‌ பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்‌.


* மே மாதத்திலேயே பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடத்தப்பட்டு, அனைத்து காலிப் பணியிடங்களும்‌ நிரப்பப்பட்டு ஜூன்‌ மாதம்‌ பள்ளி திறக்கும்‌ நாளிலிருந்தே பள்ளி அனைத்து ஆசிரியர்களுடன்‌ முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


* அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்‌ அத்தனை சலுகைகளையும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும்‌.


* மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்‌ பணியிடமும்‌ , மாவட்டக் கல்வி அலுலர்‌ பணியிடமும்‌ ஒத்த ஊதிய விகிதத்தில்‌ உள்ளதால்‌ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய காலத்தை கணக்கில்‌ கொண்டு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வு நிலை வழங்கிட வேண்டும்‌.


* அனைத்து பள்ளிகளுக்கும்‌ அமைச்சு, அடிப்படைப்‌ பணியாளயர்களை நியமிக்க வேண்டும்‌. ஓய்வு பெறும்‌ தலைமை ஆசிரியர்களுக்கு, ஓய்வு பெறும்‌ நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள்‌ பணப்பலன்கள்‌ அனைத்தையும்‌ வழங்கிட வேண்டும்‌''.


இவ்வாறு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.