தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர் எனவும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
6,724 ஆக உயர்வு
6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது.
அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
இந்த நிலையில் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டாகின. குறிப்பாக #increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது. எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் பணி இடங்களை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தி இருந்தனர்.
இதையும் வாசிக்கலாம்: Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
எப்போது அறிவிப்பு?
இந்த நிலையில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியான தகவலில், ’’பணி இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் காலி பணியிடங்களை அதிகரிப்பது குறித்து, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்.
எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், பிற்சேர்க்கை வாயிலாக அறிவிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.