டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.


குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.


6 ஆயிரத்து 244 இடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்


2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும்  ஜூன் 9ஆம் தேதி 7247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும், அரசு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.


இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வை எழுதிய தேர்வர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக #increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 




இதுகுறித்துத் தேர்வர்கள் சிலர் கூறும்போது, ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4


2018- 11230 பணியிடங்கள்


2019- 9800 பணியிடங்கள்


2022- 10300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.


எனினும் 2024-ல் 6244 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.


கிராமப்புற முதல் தலைமுறை பட்டதாரிகள் நலன் கருதி, குரூப் 4 பணியிடங்களை 15000 பணியிடங்கள் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் பேசிய அவர்கள், ’’ஆண்டுக்கு சுமார் 10,000 என்ற அளவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு குறைவாகவே அறிவித்திருப்பது எங்களுக்கு‌ பெருத்த ஏமாற்றத்தையும்‌, மன உளைச்சலையும்‌ ஏற்படுத்தியுள்ளது. இதனால்‌ பல ஆண்டுகளாக படிக்கும்‌ மாணவர்கள்‌, திருமணம்‌ ஆன பெண்கள், கைக்குழந்தையோடு படிக்கும்‌ தாய்கள்‌, பயிற்சி நிறுவனம்‌ சென்று படிக்க இயலாத கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும்‌ அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்‌ 30 வயதிற்கும்‌ மேல்‌ ஆகியும்‌ திருமணம்‌ ஆகாத ஆண்‌, பெண்‌ தேர்வர்களின்‌ அரசுப் பணிக் கனவு, கனவாகவே போய்விடும்‌ நிலையில்‌ உள்ளது’’ என்று வேதனை தெரிவித்துள்ளனர்.


பணியிடங்களை உயர்த்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமின்றி, தேர்வர்களும் போட்டித் தேர்வுகளுக்கு அதிக அளவில் தயார் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.